ஹைதராபாத்: தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ரம்பா மீது ஹைதராபாத் போலீசில் வரதட்சணைக் கொடுமை வழக்கு பதிவாகி உள்ளது. கோர்ட் உத்தரவின் பேரில் போலீஸார் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
ரம்பாவின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் ராவ் கடந்த 1999 ஆம் ஆண்டு பல்லவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் மனக் கசப்பு காரணமாக பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் தற்போது அந்தப் பெண் தனது கணவரும் அவரது உறவினர்களும் பெற்றோரிடம் இருந்து அதிக வரதட்சணை வாங்கி வரும்படி வற்புறுத்தி அவரைக் கொடுமைப்படுத்தியதாகவும், இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே எனது புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் மீது வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி, ஸ்ரீனிவாஸ் ராவ், அவரது சகோதரி நடிகை ரம்பா, குடும்பத்தினர் மீது வரதட்சணைத் தடைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பல்லவியின் குற்றச்சாட்டுக்குரிய ஆதாரங்களை ஆராய்ந்து வருவதாகவும், மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாகவும் ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment