தன்னுடைய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை ஆகஸ்ட் 15-ம் தேதியன்றே வெளியிட முடிவு செய்து பரபரப்பாக அதற்கான வேலைகளிலும் இறங்கிவிட்டார் இயக்குநர் பார்த்திபன்.
கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் பார்த்தின் நடிக்கவில்லை. படத்தின் தலைப்பில் உள்ள வேலைகளை மட்டுமே செய்துள்ளார். இன்னொன்று நீண்ட நாளாக ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருப்பவர், அதற்கேற்ப படத்தை உருவாக்கியிருப்பதாக பேச்சு நிலவுகிறது.
அவருக்காகவே ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி, அமலாபால், டாப்சி, சினேகா என பலரும் உதவி செய்துள்ளனர் இந்தப் படத்துக்கு, தங்கள் சிறப்புத் தோற்றம் மூலம்.
முதலில் இந்தப் படம் ஆகஸ்ட் 1-ம் தேதியன்று வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த தேதியில் வேறு படங்கள் அணிவகுத்ததால், தாமாகவே போட்டியிலிருந்து விலகி ஆகஸ்ட் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
ஆனால், இப்படி தள்ளிப் போய்க் கொண்டிருந்தால் படத்தின் மீதான ஈர்ப்பு குறைந்துவிடும் என்பதைப் புரிந்து, என்ன ஆனாலும் சரி என ஆகஸ்ட் 15-ம் தேதியே வெளியிடுகிறார் (அன்றுதான் அஞ்சான் வெளியாகிறது). தியேட்டர்கள் பட்டியலையும் அறிவித்துவிட்டார்.
வெளிநாடுகளிலும் கிடைத்த விநியோகஸ்தர்களைக் கொண்டு படத்தை வெளியிடுகிறார்.
"கதை திரைக்கதை வசனம் இயக்கம்' கண்டிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும். இது ஒரிஜினல் கதை.. எந்த மொழி டிவிடியிலிருந்தும் சுடப்பட்டதல்ல. அப்படிப்பட்ட ஒரிஜினல் படத்தை தியேட்டர்களில் பார்த்து வெற்றிப் பெற வையுங்கள்," என்று தன் பாணியில் அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.
Post a Comment