நிர்வாண போஸ்டர்.. ஆமீர்கான் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு

|

ஜபல்பூர்: நிர்வாண போஸ்டர் விவகாரத்தில் நடிகர் ஆமீர் கான் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது ஜபல்பூர் நீதிமன்றம்.

நடிகர் ஆமீர்கான ‘பிகே' என்ற இந்திப் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக தோன்றுகிறார். படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

நிர்வாண போஸ்டர்.. ஆமீர்கான் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ரயில் தண்டவாளத்தில் நின்றபடி பழைய டேப் ரிக்கார்டரை கையில் பிடித்துக் கொண்டு ஆமீர்கான் நிர்வாணமாக இருப்பது போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. பெரு நகரங்களில் பொது இடங்களிலெல்லாம் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இணைய தளங்களிலும் இந்த போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர்கள் நாடு முழுவதிலும் பரபரப்பைக் கிளப்பின. அத்துடன் இது ஆமீர் கானின் சொந்த சரக்கல்ல, ஒரு போர்ச்சுகல் இசையமைப்பாளர் எழுபதுகளில் தனது ஆல்பத்துக்கு வடிவமைத்ததை காப்பியடித்துவிட்டார் என்ற சர்ச்சையும் கிளம்பியது.

இந்தப் படத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் ‘பிகே' பட நிர்வாண போஸ்டர் தொடர்பாக மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் நடிகர் ஆமீர்கான், படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி, தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா உள்பட 10 பேர் மீது குற்றம் சாட்டி அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் மனுதாரர்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஆமீர்கான் உள்பட 10 பேர் மீதும் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 19-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

 

Post a Comment