மும்பை: விநாயக பெருமான் குறித்து ராம் கோபால் வர்மா டிவிட்டரில் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா நேற்று தனது டிவிட்டரில் ஒரு கீச்சு வெளியிட்டார். அதில் விநாயகர் சதுர்த்தி குறித்து சில ஆட்சேபகரமான கருத்துக்கள் இருந்தன. சிவபெருமானால் துண்டிக்கப்பட்ட விநாயகரின் தலைக்கு பதிலாக யானையின் தலையை பொருத்தியதாக புராணங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ராம்கோபால் வர்மா, விநாயகரின் வயிறு பெரிதாக இருப்பதற்கு, யானை தலையை அறுவை சிகிச்சை செய்து பொருத்தியதுதான் காரணமாக இருக்குமோ? அல்லது, சிறு வயதில் இருந்தே விநாயகருக்கு பெரிய வயிறுதானா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகர் பிறந்த தினத்தை குறிப்பதா, அல்லது யானையின் தலையை பொருத்திய தினத்தை குறிப்பதா? என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.
புராணங்கள் தெரிந்த பண்டிதர்கள் இந்த கேள்விக்கான விடையை தெரிவித்திருந்தால் பிரச்சினையாகியிருக்காது. ஆனால் வட இந்திய அரசியல்வாதிகள் இதை சர்ச்சையாக்கிவிட்டனர். ராம்கோபால் வர்மா உள்நோக்கத்துடன் இதை வெளியிட்டிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சிவசேனாவின், பிரேம் சுக்லா கூறுகையில், விநாயகர் சதுர்த்தி என்பது, மகாராஷ்டிர மாநிலத்தாரின் கலாசாரத்தில் ஊறியது. விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் ராம்கோபால் வர்மா இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்திருப்பது மராட்டியர்களை அவமரியாதை செய்வதை போலவாகும் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியான சஞ்சய் நிருபம் கூறுகையில், ராம்கோபால் வர்மா மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்தார். பாஜகவின் என்.சி.சாய்னாவும் ராம்கோபால் வர்மாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சிகளில் இருந்தும் கண்டனம் வெளியானதை தொடர்ந்து, ராம்கோபால் வர்மா தனது டிவிட்டுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
Post a Comment