செக் மோசடி வழக்கிலிருந்து இயக்குநர் சரண் ஜாமீனில் விடுதலை

|

செக் மோசடி வழக்கிலிருந்து இயக்குநர் சரண் ஜாமீனில் விடுதலை

திருநெல்வேலி: ரூ 50 லட்சம் செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல இயக்குநர் சரண், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

காதல் மன்னனில் அறிமுகமாகி, அமர்க்களம், அட்டகாசம், ஜெமினி, பார்த்தேன் ரசித்தேன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் சரண். தற்போது ‘ஆயிரத்தில் இருவர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அதில் நடிகர் வினய் கதாநாயகனாக நடிக்கிறார்.

நேற்று காலையில் நெல்லை அருகே டக்கரம்மாள்புரம் பகுதி நாற்கர சாலையில் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

காலை 9.30 மணி அளவில், சிவகாசி டவுன் போலீசார் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்தனர். இயக்குநர் சரண் ரூ.50 லட்சத்துக்கான செக் மோசடி வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாததால், பிடி ஆணை பிறப்பித்து இருப்பதாகவும், அதன் பேரில் கைது செய்வதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பிடி ஆணை உத்தரவை சரணிடம் காண்பித்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து, போலீஸ் வேனில் சிவகாசிக்கு அழைத்துச் சென்றனர்.

மதியம் 2 மணிக்கு போலீசார் சிவகாசி நீதிமன்றத்தில் இயக்குநர் சரணை ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு ஜோசப்ஜாய் வழக்கு குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் சரணை ஜாமீனில் விடுவித்தார்.

இதைத்தொடர்ந்து கோர்ட்டுக்கு வெளியே வந்த சரண் நிருபர்களிடம் கூறுகையில், "திருநெல்வேலி பகுதியில் ஆயிரத்தில் இருவர் என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. நான் அதில் பணியாற்றி வந்தேன். அப்போது சிவகாசி போலீசார், ஒரு படத்துக்காக நான் சுவரொட்டி அடித்த வழக்கில் கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் என்று என்னை அழைத்து வந்தனர்.

இங்கு நீதிபதியிடம் என் தரப்பு நியாயத்தை கூறினேன். அவர் என்னை ஜாமீனில் விடுவிக்க உத்தர விட்டார். இது பொய்யான வழக்கு. நான் மீண்டும் நெல்லைக்குச் செல்கிறேன். அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்," என்றார்.

 

Post a Comment