மும்பை: மும்பையில் உள்ள உணவகத்தில் சண்டை போட்ட விவகாரத்தால் நடிகர் சயீப் அலி கானுக்கு அளித்த பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெறலாமா என்று மத்திய அரசு யோசனையில் உள்ளது.
பாலிவுட் நடிகர் சயீப் அலி கானுக்கு கடந்த 2010ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கலைத்துறையில் அவர் ஆற்றி வரும் சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது. பாலிவுட்டில் ஜென்டில்மேன் என்று அழைக்கப்படும் சயீப் அலி கான் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்றார்.
அங்கு அவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் அவருடைய மாமனாருடன் சண்டை போட்டார். மேலும் அவர் அந்த தொழில் அதிபரின் மூக்கில் ஓங்கி ஒரு குத்துவிட்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் தகவல் அறியும் சட்ட ஆர்வலர் எஸ்.சி. அகர்வால் என்பவர் சயீப் அலி கானின் பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என்று கூறி கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு அவருக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளது.
இந்த சண்டை விவகாரத்தால் சயீபின் பத்ம ஸ்ரீ விருது பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Post a Comment