சென்னை: புலிப்பார்வை பட இசை வெளியீட்டு விழாவில் திடீரென புகுந்து போராட்டம் நடத்தினர் முற்போக்கு மாணவர் முன்னணியைச் சேர்ந்த மாணவர்கள்.
மாணவர் அமைப்பின் தலைவர் மாறன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தின்போது, சீமானைக் கைது செய்யக் கோரி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
சிங்கள வெறியர்களால் கோரமாக படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பாலச்சந்திரனை, சிறார் போராளியாகச் சித்தரித்துள்ளதாக புலிப்பார்வை படத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலச்சந்திரன் படுகொலை, ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்தெல்லாம் சர்வதேச விசாரணை நடக்கும் வேளையில், அதை திசை திருப்பும் ராஜபக்சேவின் முயற்சியே புலிப்பார்வை போன்ற படங்கள் என்று கூறி தமிழ் உணர்வாளர்கள், மாணவர் அமைப்பினர் போராடி வருகின்றனர்.
ஆனால் புலிப்பார்வை படத்துக்கு ஆதரவு அளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இன்று கலந்து கொண்டார்.
சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடங்கியது. அதற்கு முன்பே மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரையரங்குக்குள் வந்துவிட்டனர்.
விழா நடந்து கொண்டிருந்தபோது, திரையரங்குக்குள் இருந்த மாணவர்கள் - இளைஞர்கள் சுமார் 50 பேர், திடீரென எழுந்து, மேடையில் இருந்த பாரிவேந்தரையும், சீமானையும் பார்த்து, "எங்களுக்கு சில கேள்விகள் இருக்கின்றன. முதலில் அதற்கு பதில் சொல்லுங்கள்" என்று உரக்க குரல் கொடுத்தனர்.
ஆனால் அதை காதில் வாங்காமல் தொடர்ந்து பேசினர். எனவே 'துரோகி சீமானைக் கைது செய்யுங்கள்.. அவரிடம் நாங்கள் சில கேள்விகளைக் கேட்க வேண்டும்', என்று தொடர் முழக்கமிட, அங்கிருந்த நாம் தமிழர், ஐஜேகே, பாஜக கட்சியினர் மாணவர்களைத் தாக்கினர்.
பாதுகாப்புக்காக இருந்த போலீசார் தலையிட்டு, மாணவர்களைக் கைது செய்து வெளியே அழைத்துச் சென்றனர்.
+ comments + 1 comments
these students should be booked under goondas act for creating trouble
Post a Comment