'சண்டியரைத் தூக்கு...'- இப்படியும் ஒரு சினிமா சதி!

|

சமீபத்தில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற சண்டியர் படத்தை வெளியான ஒரே வாரத்தில் திரையரங்குகளிலிருந்து தூக்க சிலர் சதி செய்வதாக தயாரிப்பாளர் தரப்பில் குற்றம்சாட்டுகிறார்கள்.

புதுமுகங்கள் ஜெகன், டெல்லா ராஜ் ஆகியோர் நடிக்க, சோழதேவன் இயக்கியுள்ள படம் சண்டியர்.

கடந்த வாரம் இந்தப் படம் வெளியானது. ஆனால் அப்போது இந்தப் படத்துடன் மேலும் இரு படங்கள் வெளியாகின. அந்தப் படங்களுக்கு அதிக அரங்குகளும் கிடைத்தன.

ஆனால் அந்தப் படங்களை விட சண்டியர் படத்துக்கு கூடுதலாகப் பாராட்டுகளும் விமர்சனங்களும் கிடைத்தன. இருந்தும் படம் வெளியான ஒரே வாரத்தில் பெரும்பாலான அரங்குகளில் தூக்கப்பட்டுள்ளது.

இதற்கு சினிமா உலகில் பரபரப்பாக படங்கள் தயாரிக்கும் இரு தயாரிப்பாளர்களின் கூட்டு சதிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

"அந்தப் படத்துக்கு பப்ளிசிட்டியெல்லாம் இல்லை. மக்கள் பார்க்க வரமாட்டார்கள். எனவே எங்கள் படங்களுக்கு தியேட்டர்களைத் தாருங்கள். மேலும் எங்கள் கைவசம் அடுத்தடுத்து படங்கள் உள்ளன..," என்று கூறி, சண்டியர் படத்தைத் தூக்க வைத்துவிட்டார்களாம்.

இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில், எந்தெந்த அரங்குகளில் சண்டியர் ஓடிக் கொண்டிருந்ததோ, அந்த அரங்குகளில் குறிப்பிட்ட இரு தயாரிப்பாளர்களின் படங்களே திரையிடப்பட்டுள்ளன.

ஒரு பக்கம் நல்ல படங்கள், சின்ன படங்கள் ஓடவில்லை என்று புலம்பும் கோடம்பாக்கத்துக்கார்கள் செய்யும் வேலையைப் பார்த்தீர்களா?

 

Post a Comment