ஜிகிர்தண்டா - விமர்சனம்

|

எஸ் ஷங்கர்

நடிப்பு: சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, கருணாகரன்

ஒளிப்பதிவு: கேவ்மிக்

இசை: சந்தோஷ் நாராயணன்

தயாரிப்பு: கதிரேசன்

இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்

இரண்டாவது படம் என்ற கண்டத்தை எப்படித் தாண்டுவோரோ பீட்சா புகழ் கார்த்திக் சுப்பராஜ்? என்று ஆவலோடு காத்திருந்த கோடம்பாக்கத்துக்கு, அந்த கோடம்பாக்க சென்டிமென்டை உடைத்து விருந்தே வைத்திருக்கிறார் இயக்குநர்.

அடிதடி, வன்முறை, காதல், நகைச்சுவை எந்தப் பிரிவிலும் சேராமல், அதே நேரம் பொழுதுபோக்கு சமாச்சாரங்களையும் கைவிடாமல் ஒரு புது முயற்சியாக ஜிகிர்தண்டாவைத் தந்துள்ளார் கார்த்திக்.

ஜிகிர்தண்டா - விமர்சனம்  

சித்தார்த் ஒரு குறும்பட இயக்குநர். ஆடுகளம் நரேன் உதவியுடன் அவருக்கு ஒரு பெரும்படம்.. அதாவது சினிமா இயக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு அதிரடி ஆக்ஷன் கதையை ரத்தமும் வன்முறையும் தெறிக்கும் ஒரு கதையை படமாக்க விரும்புகிறார்.

அப்போது மதுரையில் இருக்கும் அசால்ட் சேது (பாபி சிம்ஹா) என்ற மெகா ரவுடி பற்றிச் சொல்லும் நரேன், அவர் வாழ்க்கையையே படமாக்கக் கூறுகிறார். மதுரைக்கே போய் நண்பன் வீட்டில் தங்கி சேதுவின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள முயல்கிறார் சித்தார்த்.

ஜிகிர்தண்டா - விமர்சனம்

சேதுவுக்கு இட்லி தரும் பெண்ணின் மகள் லட்சுமி மேனன் மூலம் சேதுவின் வாழ்க்கையை அறிந்து கொள்ள முயற்சிக்கும்போது, வில்லனிடம் சிக்கிக் கொள்கிறார் சித்தார்த். பிறகு... அந்தக் கதையில் தானே நாயகனாக நடிக்க ஆசைப்படுகிறார் வில்லன்.. அப்புறம் என்ன ஆச்சு என்பதை கொஞ்சம் ஜவ்வாக இழுத்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் நாயகன் சித்தார்த் அந்தப் பாத்திரத்துக்குள் பொருந்த முயற்சித்தாலும் நம்மால் அவரை ஒரு கஷ்டப்படும் சினிமா இயக்குநராக ஏற்க முடியவில்லை. படம் சிறப்பாகவே இருந்தாலும், பொருத்தமான நாயகன் அமையாதது ஒரு மைனஸ்தான்.

லட்சுமி மேனனுக்கு நிறைய வேலை இல்லை. ஆனால் அவர் வரும் காட்சிகள் அனைத்தும் நிறைவாக உள்ளன. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு இவரை மிஞ்ச நடிகைகளில்லை!

கருணாகரன் சில காட்சிகளில் சிரிப்பை வரவழைத்தாலும், படத்தில் ஹீரோவையே தூக்கிச் சாப்பிடுகிறார் வில்லனாக வரும் பாபி சிம்ஹா. ஆரம்பத்தில் டெர்ரர் ரவுடியாகவும், பின்னர் சினிமா ஹீரோவாக கலகலக்க வைப்பதிலும் நூறு சதவீதம் ஸ்கோர் செய்கிறார் மனிதர்.

எடுக்க நினைத்தது காமெடிப் படம். அதற்கு ஆக்ஷன் படம் என்ற பயங்கர பில்ட் அப் கொடுத்து எதிர்ப்பார்ப்பை எகிற வைத்து, கடைசியில் பக்கா காமெடியாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் பெரிய குறை, இரண்டாம் பாதியை அத்தனை இழு இழுத்திருப்பதுதான். கொஞ்சம் கூட தயங்காமல் ஒரு 25 நிமிடக் காட்சிகளை வெட்டித் தள்ளியிருக்கலாம்!

கேவ்மிக் யுஆரியின் ஒளிப்பதிவு ஓகே. அந்த கிணற்றுப் பாட்டில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை பரவாயில்லை. கண்ணம்மா பாட்டு கேட்கலாம் ரகம்.

முதல்பாதி வேறு ரகம்... இரண்டாம் பாதி வேறு ரகம். ஆனாலும் சொன்ன விதத்தில் படத்தைப் பார்க்கவைத்து, தானும் பாஸாகியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

 

Post a Comment