ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகரும் எம் எல் ஏவுமான பாலகிருஷ்ணாவுக்கு படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் காயம் ஏற்பட்டது.
என்.டி.ராமராவ் மகனும் தெலுங்கு முன்னணி நடிகருமான பாலகிருஷ்ணா, பெயர் சூட்டாத புதிய தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ருத்ரபாட்டி ரமணாராவ் தயாரிக்கிறார். சத்திய தேவ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது.
சண்டை காட்சி ஒன்றில் பாலகிருஷ்ணா நடித்துக் கொண்டிருந்தார். இதில் ஒரு காரை கயிறு கட்டி மேலே தூக்குவது போன்ற காட்சி இடம் பெற்றது. அப்போது கயிறு அறுந்ததில், கார் பாலகிருஷ்ணா இடது காலில் விழுந்தது.
இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஹைதராபாத்தில் உள்ள காமினேனி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எலும்பு முறிவு இல்லாததால் சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பினார்.
Post a Comment