நிழலுலக தாதாக்களால் ஆபத்து: ஷாருக்கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

|

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானிற்கு நிழலுலக தாதாக்களால் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு நெருக்கமான தயாரிப்பாளர் கரீம் மொரானி. ஷாருக் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் உள்ளிட்ட பல பெரிய பட்ஜெட் பாலிவுட் படங்களின் தயாரிப்பாளர் கரீம் மொரானி. ஷாருக்கிற்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கரீம் மொரானியும் ஒருவர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மும்பையிலுள்ள கரீம் மொரானி வீட்டுக்கு வெளியே நின்றபடி 3 பேர் அவரது வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். அதிருஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு கரீம் மொரானியின் செல்போனுக்கு மிரட்டல் எஸ்எம்எஸ் வந்தது.

நிழலுலக தாதாக்களால் ஆபத்து: ஷாருக்கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

நிழலுலக தாதா ரவி பூஜாரிதான் இந்த மிரட்டல்களுக்கு காரணம் என்று கரீம் மொரானி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ரவி பூஜாரி கோஷ்டியால் ஷாருக் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கிடைத்த உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து ஷாருக்கானிற்கு மும்பை போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

பாலிவுட் திரையுலகை சேர்ந்த பலரும் பணத்துக்காக நிழலுலக தாதாக்களிடமிருந்து மிரட்டல்களை எதிர்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. தாவுத் இப்ராகிம், சோட்டா சகீல், ரவி பூஜாரி ஆகியோர் இந்த தாதாக்களில் முக்கியமானவர்கள்.

 

Post a Comment