துபாய்: துபாயில் உள்ள தங்களின் வீட்டில் பிணமாகக் கிடந்த மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சந்தோஷ் குமார், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரின் உடல்கள் அந்த நாட்டிலேயே தகனம் செய்யப்பட்டது.
கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சவுபர்னிகா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி மலையாள படங்களை தயாரித்து வந்தார். மாதம்பி என்ற ஹிட் படத்தின் துணை தயாரிப்பாளர் அவர் தான். இந்நிலையில் அவர் தனது மனைவி மஞ்சு மற்றும் 9 வயது மகள் கௌரியுடன் துபாயில் செட்டில் ஆனார். அங்கு அவர் நடத்தி வந்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அவர் பிறருக்கு செலுத்த வேண்டிய தொகை மட்டும் ரூ.66 லட்சம் இருந்துள்ளது. இது தவிர அவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் 15ம் தேதி தனது குடும்பத்தாருடன் துபாய் என்.எம்.சி. மருத்துவமனை அருகே உள்ள அவரது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் அவர் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம், கடன் தொல்லை காரணமாகவே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து சந்தோஷ் குமார் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோரின் உடல்கள் கடந்த சனிக்கிழமை துபாயில் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.
அவர்கள் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சுமார் ஒரு மாதம் கழித்து அவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment