மேகா படத்தின் இறுதிக் காட்சி, படம் பார்த்தவர்களுக்கு திருப்தி அளிக்காததால் அதில் மாற்றம் செய்துள்ளனர் படக்குழுவினர்.
இளையராஜா இசையில் தயாராகியுள்ள படம் ‘மேகா'. அஸ்வின், சிருஷ்டி ஜோடியாக நடித்துள்ளனர். கார்த்திக் ரிஷி இயக்கியுள்ளார். ஆல்பர்ட் ஜேம்ஸ், எஸ்.செல்வகுமார் தயாரித்துள்ளனர்.
ஜெ.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜெ.சதீஷ்குமார் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார். தமிழகம் முழுவதும் வருகிற 22-ந்தேதி ‘மேகா' படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது ரிலீஸ் தேதியைத் தள்ளி வைத்துள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் கூறுகையில், "இளையராஜா இசையில் ‘மேகா' படம் பிரமாதமாக வந்துள்ளதால் இப்படத்தை வெளியிடுகிறேன்.
முன் கூட்டியே கடந்த வாரம் இந்த படத்தை பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டினோம். எல்லோரும் படத்தைப் பாராட்டினார்கள்.
ஆனால் ‘கிளைமாக்ஸ்' காட்சி சோகமாக முடிகிறது என்றும் அதை மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் யோசனை சொன்னார்கள். அதை ஏற்றுக் கொண்டேன். ராஜா சாரும் இதையே சொன்னார்.
இப்போது க்ளைமாக்ஸ் சுபமாக முடிவது போல் படத்தை மாற்றி உள்ளோம். இதற்காக மீண்டும் புதிய கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கி சேர்த்துள்ளோம்.
இதற்காக மீண்டும் படத்துக்கு தணிக்கை செய்ய வேண்டி உள்ளது. தணிக்கை குழுவில் ஆள் பற்றாக்குறை இருப்பதால் உடனடியாக தணிக்கை செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது. படம் தணிக்கையானதும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்," என்றார்.
Post a Comment