காவியத் தலைவன் மட்டும் நல்லா ஓடலைன்னா... நாசர் சார் உங்களுக்கு இருக்கு என்று செல்லமாக மிரட்டினார் நடிகர் சித்தார்த்.
சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காவியத் தலைவன். வசந்த பாலன் இயக்கியுள்ளார்.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இந்த விழாவுக்காகவே அமெரிக்காவிலிருந்து அவசரமாக வந்திருந்தார் ரஹ்மான்.
விழாவில் கலந்து கொண்ட எல்லோரும் நிறைய பேசினார்கள். கதாநாயகன் சித்தார்த் பேசுகையில், "இந்த இசை ஆல்பம் மறைந்த கவிஞர் வாலிக்கும், நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டருக்கும் சமர்ப்பணம்.
இந்தப் படத்தைப் பொருத்தவரை, நாசர் சார்தான் சங்கரதாஸ் சுவாமிகள். அவர்தான் எங்களையெல்லாம் உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.
இந்தப் படம் ஓடுமா என்று நாங்கள் கொஞ்சம் அவநம்பிக்கையோடு நடித்தபோது, 'தைரியமா நடிங்கய்யா.. நல்லா வரும்.. நல்லா ஓடும்' என்று நம்பிக்கை வார்த்தை சொல்லி தைரியமூட்டினார். அவர் கொடுத்த அந்த நம்பிக்கைதான் இந்தப் படம்.
நாசர் சார்.. இந்த படம் மட்டும் நல்லா ஓடலைன்னா.. இருக்கு உங்களுக்கு," என்று செல்லமாக மிரட்ட, மேடையில் இருந்த ரஹ்மான் குலுங்கிச் சிரித்தார்.
Post a Comment