ஹைதராபாத்: இயக்குநர் களஞ்சியம் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயமடைந்துள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் களஞ்சியம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபு நடித்த ‘மிட்டா மிராசு', முரளி-தேவயானி நடித்த ‘பூமணி' உள்ளிட்ட பல படங்களை எடுத்தவர் இயக்குனர் களஞ்சியம். இவர் கடைசியாக ‘கருங்காலி' என்ற படத்தை இயக்கி, நடித்திருக்கிறார்.
‘ஊர்சுற்றிப்புராணம்' என்ற படத்தை இயக்கி வந்தார் களஞ்சியம். இப்படத்தில் நடித்த அஞ்சலி, களஞ்சியம் மீதும் தனது சித்தி மீதும் புகார் கூறி அப்படத்தில் இருந்து பாதியில் விலகினார். இதனால் இந்த படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக களஞ்சியம் சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி புறப்பட்டார். அவருடன் மேலும் 2 பேரும் அந்த காரில் பயணம் செய்தனர்.
அவரது கார் ஆந்திர மாநிலம் ஓங்கல் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளாகியது. இதில், காரில் பயணம் செய்த இயக்குனர் களஞ்சியம் உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
விபத்து நடந்தது அறிந்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காரில் படுகாயங்களுடன் இருந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் அருண் என்பவர் இறந்துவிட்டதாகவும், களஞ்சியம் மற்றும் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Post a Comment