புத்தம் புதுக் காலை.. பொன்னிற வேளை... - எண்பதுகளில் சினிமா இசையை அனுபவித்த எவருடைய காதுகளிலும் இளையராஜாவின் இந்தப் பாடல் நிரந்தரமாய் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.
இந்தத் தலைமுறையினரும் முதல் முறை கேட்டதுமே ரசித்து பரவசப்படும் இனிமையான இந்தப் பாடலை, மகேந்திரன் இயக்கத் திட்டமிட்டிருந்த மருதாணி படத்துக்காகப் போட்டிருந்தார் ராஜா.
ஆனால் அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. எனவே அந்தப் பாடலை அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக பாரதிராஜாவுக்குக் கொடுத்தார் இளையராஜா.
ஆனால் படத்தின் இசைத் தட்டில் இடம்பெற்ற புத்தம் புதுக்காலை, படத்தில் இடம்பெறவில்லை.
பாடல் வெளியாகி 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் பாடலை நேற்று வெளியான மேகா படத்தில் இடம்பெறச் செய்துள்ளார் இளையராஜா. இந்தப் படத்துக்கு இசையும் அவரே.
ஒரிஜினல் பாடலுக்கும், ராஜா புதிதாக இசையமைத்துக் கொடுத்துள்ள இந்தப் பாடலுக்கும் சின்ன வித்தியாசம் உள்ளது. அதற்கான காரணத்தை படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.
இந்தப் பாடல் குறித்து இளையராஜா கூறுகையில், "அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக இந்தப் பாடலை நான் கொடுத்தபோது, அதை படமாக்கிய பாரதிராஜா, நீளம் கருதி பின்னர் நீக்கிவிட்டார். மேகா படத்தில் பொருத்தமான ஒரு சூழலில் இதைப் பயன்படுத்த விரும்பினார்கள். அதற்கேற்ப உருவாக்கிக் கொடுத்துள்ளேன்," என்றார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சியில் புத்தம் புதுக் காலை பாடலுக்கு அத்தனை வரவேற்பு.
மேகா படம் நேற்று வெளியானது. படத்தை டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ் தயாரித்துள்ளார். அஸ்வின்- சிருஷ்டி நடித்துள்ளனர். கார்த்திக் ரிஷி இயக்கியுள்ளார்.
Post a Comment