சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலைக்காக இன்று திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பழரசம் கொடுத்து முடித்து வைத்தார் பழம்பெரும் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் எதிரே இந்த உண்ணாவிரதம் நடந்தது. இதில் திரையுலகின் அனைத்து சங்கங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து டி சிவா, கேயார், நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார், ராதாரவி, இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் போன்றவர்கள் வந்திருந்தனர்.
சரத்குமார் தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
மேடையில் யாரும் பேசவில்லை. அவர்களிடம் ஜெயா டிவி பைட்ஸ் எடுத்து நேரடியாக ஒளிபரப்பியது.
நகைச்சுவை நடிகர்கள், முன்னாள் நடிகர்கள், அதிமுக ஆதரவு கலைஞர்களே பெருமளவு இதில் பங்கேற்றனர். லைம்லைட்டில் உள்ளவர்கள் என்று பார்த்தால் சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், கார்த்தி, சூரி, விஜய் சேதுபதி, விவேக் போன்ற சிலர் மட்டும்தான் பங்கேற்றனர்.
முன்னணி நடிகைகள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை.
மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவடைந்தது. இதில் காலையிலிருந்து மாலை வரை பங்கேற்றவர்களுக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் பழம்பெரும் நடிகரும் முன்னாள் எம்பியுமான எஸ்எஸ் ராஜேந்திரன்.
Post a Comment