உண்ணாவிரதம்.. கமல், விஜய் கலந்து கொள்ளாததற்கு காரணம் இதுவா இருக்குமோ...?

|

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று நடந்த திரையுலகினரின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதி முக்கியமான கலைஞர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரவில்லை. மற்ற முக்கியஸ்தர்களான கமல்ஹாசன், விஜய் ஆகியோரும் வரவில்லை. இருவரது படங்களுமே கடந்த ஜெயலலிதா ஆட்சியில் மிகப் பெரிய நெருக்கடிகளைச் சந்தித்தது என்பது நினைவிருக்கலாம்.

உண்ணாவிரதம்.. கமல், விஜய் கலந்து கொள்ளாததற்கு காரணம் இதுவா இருக்குமோ...?

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் மிகப் பெரிய சவாலைச் சந்தித்தது. அந்தப் படத்திற்கு ஜெயலலிதா அரசு அதிரடியாக தடையும் விதித்தது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று அறிவித்து மேலும் பரபரப்பைக் கூட்டினார்.

இந்தப் பட விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் தரும் நிலையும் ஏற்பட்டது. பின்னர் இந்த விவகாரம் ஒரு வழியாக தீர்ந்து படமும் வெளியாகி நல்ல வசூலையும் பார்த்தது.

அடுத்தது விஜய். இவரது தலைவா படத்தின் சில காட்சிகள், படத்தின் தலைப்புக்குக் கீழே வைக்கப்பட்ட பன்ச் லைன் ஆகியவை ஜெயலலிதா அரசை கடுமையான கோபத்துக்குள்ளாக்கியது. டைம் டூ லீட் என்று போடப்பட்ட வாசகத்தால் படத்தை வெளியிட முடியாத நிலைக்குக் கொண்டு போய் விட்டது அதிமுக அரசு.

விஜய்யும், படத் தயாரிப்பாளரும் வீடியோ செய்தி மூலம் கெஞ்சும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டனர். உச்சகட்டமாக தனது தந்தையுடன் கொடநாடு எஸ்டேட்டுக்கே ஓடினார் விஜய். ஆனால் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் பன்ச்லைனை தூக்கி விட்டு படத்தை வெளியிட சம்மதித்த பிறகே படத்திற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டது. படம் பெயிலியர்!.

ஜெயலலிதாவுக்குத் தீர்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பலர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடியதாக செய்திகள் வந்து விஜய் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் ஜெயலலிதாவுக்கு ஆதரவான இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

அதேபோல அஜீத் உள்ளிட்ட பெரிய நடிகர்களும், இயக்குநர் ஷங்கர் போன்ற பெரியவர்களும் உண்ணாவிரதத்திற்கு வருவார்களா என்பதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருந்தது. ஆனால் யாருமே வரவில்லை.

 

Post a Comment