"கன்னியும் காளையும் செம காதல்' திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சிங்கம் பட நிறுவனத்தைச் சேர்ந்த ககன் போத்ரா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.சி.வடிவுடையான் "கன்னியும் காளையும் செம காதல்' என்ற படத்தை தயாரித்துள்ளார்.
இதில், நடிகர் கரண் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கான நெகட்டிவ் உரிமை, தொலைக்காட்சி உரிமை போன்ற அனைத்தையும் நான் வாங்கியுள்ளேன். இதற்காக ஒப்பந்தப்படி ரூ. 40 லட்சம் வழங்கியுள்ளேன்.
இந்த நிலையில், இந்தப் படத்தை வேறொருவர் மூலம் வெளியிட தயாரிப்பாளர் முயற்சித்து வருகிறார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
எனவே, இந்தப் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்," என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 17-ஆம் தேதி வரை படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டார்.
Post a Comment