சென்னை: ஹரி இயக்கத்தில், விஷால், சுருதிஹாசன் நடிக்கும் பூஜை திரைப்படத்திற்கு தமிழகத்தை விட ஆந்திராவில் அதிக தியேட்டர் புக் ஆகியுள்ளது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது. அதற்கு சுருதியை முக்கியமான காரணத்தை கூறுகிறார்கள் ஆந்திர திரைப்பட வினியோகஸ்தர்கள்.
ஹரி இயக்கத்தில், விஷால், சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்க தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ள படம் பூஜை. விஷால் படங்களிலேயே அதிகபட்சமாக மொத்தம் 1108 தியேட்டர்கள் புக் ஆகியுள்ள படம் இது.
கேரளாவில் 70 தியேட்டர்கள், கர்நாடகாவில் 47, எப்.எம்.எஸ் 143, தமிழகத்தில் 375, ஆந்திராவில் 473 தியேட்டர்களில் பூஜை ரிலீஸ் ஆக உள்ளது. ஆந்திராவில் தமிழகத்தைவிட அதிக தியேட்டர்களில் படம் ரிலீசாக உள்ளதுதான் இதில் விஷயமே.
கத்தி படத்துடன் கோதாவில் குதிக்க வேண்டிய நிலையில், தமிழகத்தில் வசூல் இறங்கினாலும், ஆந்திரம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை படக்குழுவிற்கு.
ஆந்திராவில் அதிக தியேட்டர்களில் பூஜை ரிலீசாக காரணம், அதன் ஹீரோயின் சுருதிஹாசன்தான். தமிழிலில் அம்மணி நடித்த படங்கள் கைகொடுக்காவிட்டாலும், ஆந்திராவில் ராசிக்கார பெண் அவர். ஒரு பாடலில் நடனமாடினாலும் படம் ஹிட் ஆகிவிடுகிறதாம் தெலுங்கு தேசத்தில். எனவே பூஜை படத்தை சுருதி ஹாசன் நடித்த படம் என்றுதான் அங்கு விளம்பரம் செய்து வருகின்றனர்.
விஜயசாந்தி, ரோஜா போன்றே சுருதிஹாசனும் அங்கு ஹீரோயினை மையப்படுத்தும் படங்களுக்கான முகவரியாக மாறிப்போயுள்ளார். இதுதான் ஆந்திராவில் பூஜை களை கட்ட காரணம்.
Post a Comment