ஹைதராபாத்: ஹூட்ஹூட் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ள நடிகர்களை இயக்குனர் ராம்கோபால் வர்மா விமர்சித்துள்ளார்.
இயக்குனர் ராம் கோபால் வர்மா அடிக்கடி செய்தியில் வருவார். சாதனைகளுக்காக அல்ல ஏதாவது சர்ச்சையை கிளப்பி செய்தியில் வருவார். மனிதர் மனதில் பட்டதையெல்லாம் பட் பட் என்று பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.
இந்நிலையில் அவர் ஹூட்ஹூட் புயல் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர்களை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
திரை நட்சத்திரங்கள் மக்களிடம் இருந்து ரூ.100 கோடிகள் வாங்கிக் கொண்டு விசாகப்பட்டினத்திற்கு சில லட்சங்களை மட்டுமே நன்கொடையாக அளித்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைகிறேன். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பை அளிப்பதோடு, பிரார்த்தனை செய்கிறார்களாம். ஏனென்றால் அவை இலவசமாச்சே என்று தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தை தாக்கிய ஹூட்ஹூட் புயல் நிவாரண நிதிக்கு நடிகர் பவன் கல்யாண் ரூ.50 லட்சமும், மகேஷ் பாபு ரூ.25 லட்சமும், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் அல்லு அர்ஜுன் தலா ரூ.20 லட்சமும், ராம் சரண் தேஜா ரூ.15 லட்சமும் நன்கொடை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment