கத்தி விமர்சனம்

|

Rating:
2.5/5
-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: விஜய், சமந்தா, நீல் நித்தின் முகேஷ், சதீஷ்

ஒளிப்பதிவு: ஜார்ஜ் வில்லியம்ஸ்

இசை: அனிருத்

தயாரிப்பு: கருணாமூர்த்தி

இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ்

ஒரு பெரிய ஹீரோ படத்தில், வெகுஜனங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை - விவசாயத்துக்கான தண்ணீரை குளிர்பான கார்ப்பொரேட்டுகள் திருடும் அயோக்கியத்தனம்- பற்றிப் பேசுவதை நினைத்தால் ஒரு சின்ன சந்தோஷம்.

கத்தி விமர்சனம்

ஆனால் அந்தப் பிரச்சினையைப் பேசுபவர்கள் யார் பாருங்கள்?

இதே தமிழ் மண்ணில் நீர் வளமுள்ள பகுதிகளாகப் பார்த்து மெகா குளிர்பான ஆலைகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சிக் கொண்டிருக்கும் கோக் நிறுவனத்தின் விளம்பரத் தூதரான விஜய்யும், கார்ப்பொரேட் தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையான இயக்குநர் ஏ ஆர் முருகதாஸும்.. என்ன ஒரு முரண்பாடு!!

பெரிய லாஜிக் ஓட்டையுடன் ஆரம்பிக்கிறது கதை.

கொல்கத்தா சிறையிலிருந்து தப்பிக்கிறான் ஒரு கைதி. அவனைப் பிடிக்க, அதே சிறையில் தப்பித்துச் செல்வதில் எக்ஸ்பர்ட்டான இன்னொரு கைதி கதிரேசன் (விஜய் நெ 1) உதவியை நாடுகிறது போலீஸ் (என்னா ஒரு டக்கு!). இதான்டா சான்ஸ் என்று எஸ்கேப்பாகிறான் கதிரேசன்.

கத்தி விமர்சனம்

தப்பிச் செல்லும் முயற்சியில் இருக்கும்போதுதான் ஜீவானந்தம் (விஜய் நெ 2) என்பவனை சிலர் துப்பாக்கியால் சுடுவதைப் பார்க்கிறான். அவனைக் காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, கதிரேசனைத் துரத்தி வருகிறது கொல்கத்தா போலீஸ்.

அவர்களிடம் ஜீவானந்தத்தை சிக்கவைத்துவிட்டு, தப்பிக்கும் கதிரேசன், ஜீவானந்தம் நடத்தும் முதியோர் இல்லத்துக்கு வந்து சேர்கிறான். அங்கு தங்கி கிடைப்பதை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் எண்ணத்திலிருக்கும் கதிரேசனுக்கு, ஒரு கட்டத்தில் ஜீவானந்தத்தின் பின்னணி, மக்களுக்கான அவனது போராட்டம் புரிகிறது.

அருமையான நீரூற்று ஓடும் வளமான அந்த கிராமத்தில், நீரை உறிஞ்சி குளிர்பான ஆலை அமைக்கப் பார்க்கிறது ஒரு பகாசுர குளிர்ப்பான நிறுவனம். அதைத் தடுத்து நிறுத்தப் போராடும் ஜீவானந்தத்தின் இடத்திலிருந்து மக்களையும் விவசாயத்தையும் எப்படிக் காப்பாற்றுகிறான் கதிரேசன், அந்த ஜீவானந்தம் என்ன ஆனான் என்பது மீதிக் கதை!

கத்தி விமர்சனம்

இன்றைக்கு மக்கள் முன் விஸ்வரூபமெடுத்து நிற்கும் தண்ணீர்ப் பிரச்சினை, அது எப்படி மண்ணின் மைந்தர்களை மீறி களவாடப் படுகிறது என்பதைக் கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். ஆனால் அந்த நல்ல விஷயத்தை அவரே கெடுத்திருக்கிறார், சொதப்பலான திரைக்கதை மூலம்.

இப்படி ஒரு வலுவான கதைக் களம் இருக்கும்போது, அதற்கான திரைக்கதையை ரமணா பாணியில் இறுகக் கட்டியிருக்க வேண்டாமா? ஆனானப்பட்ட விஜயகாந்தையே அந்த அளவு அடக்கி வாசிக்க வைத்து, பார்ப்பவர்களை ஆவேசப்பட வைத்த முருகதாஸ், இந்தப் படத்தில் கதிரேசன் விஜய்யை கோமாளித்தனமாகக் காண்பித்திருக்கிறார். காமெடி என்ற பெயரில் அந்த விஜய்யும் படுத்துகிறார்.

சமந்தாவை கொஞ்ச காலம் தமிழ் சினிமாவில் பார்க்காமல் இருந்தாலே தேவலாம். அவர் சிரிப்பு சாகடிக்கிறது (அழகால் அல்ல!). முதல் பாதி படம் எரிச்சலைக் கிளப்புவதில், விஜய் - சமந்தா காதல் காட்சிகளுக்கும் கணிசமான பங்குண்டு.

சென்னைக்கு வரும் குடிநீரைத் தடுக்க விஜய் போடும் திட்டமெல்லாம், கத்தியில் காமெடி இல்லாத பஞ்சத்தைப் போக்க வரும் காட்சிகள்!

மீடியாவை ஒரு பிடி பிடித்திருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். எத்தனை ஆண்டு கால கோபமோ.. அவரது விமர்சனங்களில் பாதியை ஏற்க முடியாது என்றாலும், மீதி உண்மைதான்!

ஆனால் மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிகள் கார்ப்பொரேட்டுகளில் சோரம் போய் கள்ளமவுனம் காக்கும் தருணங்களில், இதே மீடியாதான் இப்போதும் விவசாயப் பிரச்சினையைப் பேசுகிறது, மோசடிகளை அம்பலமாக்குகிறது.

இரட்டை வேடங்கள் விஜய்க்கு. தோற்றத்தில் பெரிய மாற்றமில்லை (அது வேலைக்காகாது என்று இயக்குநருக்கும் தெரியும் போலிருக்கிறது!). ஆனால் நடிப்பில் வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார். அந்த விருது வாங்கும் விழாவில் கதிரேசன் நடந்து கொள்ளும் விதம் ஏனோ அழகிய தமிழ் மகனை நினைவூட்டுகிறது!

சதீஷ் என்ற நடிகர் செய்வதையெல்லாம் காமெடி என்று எடுத்துக் கொண்டால்... கஷ்டம்டா சாமி!

வில்லனாக வரும் நீல் நிதின் முகேஷ் கவனிக்க வைக்கிறார்.

படத்தின் பல காட்சிகள், ஏற்கெனவே தமிழில் வெளியான பல படங்களை நினைவூட்ட, ஐயாம் வெய்ட்டிங் என விஜய் பஞ்சடிக்கும் இடம், இதே விஜய் - முருகதாஸ் கூட்டணியின் துப்பாக்கியை நினைவூட்டுகிறது. என்னாச்சு முருகதாஸுக்கு?

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் அந்த கிராமம் அழகு. அனிருத் இசை... இன்னும் கொலைவெறி வட்டத்தைத் தாண்டவே இல்லை. இதில் அவரிடமிருந்து காட்சிக்கேற்ற பிஜிஎம்மெல்லாம் எதிர்ப்பார்ப்பது நம்ம தவறு!

ஏ ஆர் முருகதாஸ் எடுத்துக் கொண்ட களம் சரி... கதைப் பின்னல் சொதப்பல்!

 

+ comments + 2 comments

Anonymous
24 October 2014 at 19:43

bloody one sided review
kollyinsider have to learn how to review a movie in a straight manner
disappointed with the review as a cinema lover...........

25 October 2014 at 11:16

review enga?

Post a Comment