முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகிறது இவனுக்கு தண்ணில கண்டம் எனும் புதிய படம்.
மக்களிடையே பிரபலமான வாக்கியத்தை தலைப்பாக்கினால் எளிதில் சென்று சேரும் என்பதற்காக இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறார்களாம்.
சின்னத் திரையில் பிரபலமான ''சின்ன பாப்பா பெரிய பாப்பா ' போன்ற தொடர்களை இயக்கிய சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் இது.
'நகைச்சுவை கலந்த கதைகளுக்கு சின்னத்திரை, பெரியத்திரை என்ற பேதம் இல்லை விவிஆர் சினிமாஸ்க் என்ற நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை தயாரிக்கும் வி. வெங்கட்ராஜ் கதையைக் கேட்ட உடனே படப்பிடிப்புக்குச் செல்லுமாறு கூறி விட்டார்,' என்கிறார் இயக்குநர் சக்திவேல்.
'இவனுக்கு தண்ணில கண்டம்' இன்றைய இளைஞர்களின் அன்றாட வாழ்வில் நடக்கும் சில சம்பவங்களை நகைச்சுவை கலந்து சொல்லும் படமாக உருவாக்கப்படுகிறதாம்.
'வாழ்வில் எல்லா கட்டத்திலும் தோல்வியைச் சந்திக்கும் ஒரு தொலைக் காட்சித் தொகுப்பாளர் எதிர்பாராவிதமாக ஒரு கேளிக்கை விருந்தில் பங்கேற்க நேரிடுகிறது. தன்னிலை மறந்து அவன் இருக்கும் சில நிமிடங்கள் அவன் வாழ்கையைப் புரட்டிப் போடுகிறது. போட எத்தனிக்கிறது.அதன் தொடர்ச்சியாகநடக்கும் சம்பவங்களும் அவனுக்கு அந்த நிமிடங்கள் சாதகமா அல்லது பாதகமா என்பதையும் சிரிக்க சிரிக்க சொல்லி இருக்கிறேன். துரித வேகத்தில் படப்பிடிப்பையும் முடித்து, டப்பிங் உள்ளிட்ட இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கிறோம். இவனுக்கு தண்ணில கண்டம் முழுக்க முழுக்க எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படம்,' என்கிறார் சக்திவேல் மிகுந்த நம்பிக்கையுடன்.
தொலை காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் புதுமுகம் நேஹா. இவர்களுடன் பாண்டிய ராஜன், சுப்பு பஞ்சு, மனோ பாலா, எம் எஸ்பாஸ்கர், சென்ட்ராயன்,' நான் கடவுள்' ராஜேந்திரன் மற்றும் சண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.
Post a Comment