சிக்கி முக்கி, சமீபத்தில் வெளியான தலக்கோணம் போன்ற படங்களில் நடித்த ஜித்தேஷ் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஏரோநாட்டிகல் எஞ்ஜினியரிங் முடித்திருக்கிறார். ஆனால் ஆசை சினிமாவின் மீதுதான்.
எனவே நடிக்க வந்து இரு படங்களையும் முடித்துவிட்டார்.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "ஏரோனேட்டிக்கல் இஞ்ஜினியரிங் முடித்திருந்தும், நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தில் மாஸ்டர் ஸ்ரீதரிடம் முறையாக நான்கு ஆண்டுகள் நடனம் கற்றேன். ‘சுட்டி டிவி'யில் குழந்தைகளுக்கு நடனம் சொல்லித்தருவது, நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினேன்.
பல்வேறு நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஒருமுறை எனது மேடை நாடகத்தில் என் நடிப்பைப் பார்த்த ‘சிக்கி முக்கி' படத்தின் தயாரிப்பாளர், என்னை நாயகனாக அப்படத்தில் அறிமுகம் செய்தார்.
இது மட்டுமல்லாமல், சில குறும்படங்களிலும் நடித்துள்ளேன். ‘கலைஞர் டிவி'யின் ‘நாளைய இயக்குனரி'ல் வெளிவந்த ‘சத்ய பிரமாணம்' என்ற குறும்படத்தில் நடித்தேன். இதன் இயக்குனர் ‘விழா' படத்தை இயக்கிய பாரதி பாலகுமாரன். ‘சத்ய பிரமாணம்' குறும்படமும் விரைவில் முழுநீள படமாக வெளிவர இருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் போன்ற குறும்படங்கள், விளம்பரங்களிலும் நடித்துள்ளேன்.
பெரிய படங்களில் நடித்தால்தான் இன்டஸ்ட்ரியில் பெரிதாக வெளியில் தெரிய முடியும். "சிக்கி முக்கி', ‘தலக்கோணம்' படங்களுக்குப் பிறகு வேறு எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. எனக்கு, பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும்; சமந்தா போன்ற முன்னணி நாயகிகளுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசையாக உள்ளது," என்றார்.
ஆசைதானே.. படலாம்.. தப்பேயில்ல!
Post a Comment