நான்தான் சிவா படத்தின் ஷூட்டிங்கில் படுகாயமடைந்த உதவி இயக்குநர் பாஸ்கரை நேரில் பார்த்து நலம் விசாரித்த இயக்குநர் லிங்குசாமி, அவருக்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக் கொண்டார்.
ரேணிகுண்டா, 18 வயசு படங்களை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கத்தில் வளரும் படம் நான்தான் சிவா.
இந்தப் படத்தில் லிங்குசாமியின் அண்ணன் மகன் வினோத் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அர்ஷிதா ஷெட்டி. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் 20 அடி உயரத்திலிருந்து உதவி இயக்குநர் பாஸ்கர் தவறி விழுந்தார். இதில் அவரது கை கால்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதைக் கேள்விப்பட்டதும் மருத்துவமனைக்கு விரைந்தார் இயக்குநர் லிங்குசாமி. உதவி இயக்குநர் பாஸ்கரை நலம் விசாரித்த அவர், அவரது சிகிச்சைக்குத் தேவையான மொத்த செலவையும் ஏற்றதோடு, குடும்பத்தினருக்கும் உதவுவதாக ஆறுதல் கூறினார்.
அஞ்சான் பிரச்சினை, சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் என பல்வேறு பிரச்சினைகள் தன்னைச் சூழ்ந்திருந்தாலும், மனிதாபிமானத்துடன் ஒரு உதவி இயக்குநருக்கு அவர் செய்திருக்கும் பெரும் உதவியை நினைத்து நான்தான் சிவா குழுவே நெகிழ்கிறது.
Post a Comment