பெங்களூர்: கன்னட நடிகர் ராஜ்குமாரின் நினைவு மண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகள் கர்நடாக அரசு சார்பில் அழைக்கப்பட்டுள்ளனர்.
கன்னட முன்னணி நடிகராக விளங்கிய மறைந்த ராஜ்குமாரின் நினைவு மண்டபம், பெங்களூர் நந்தினி லேஅவுட்டிலுள்ள கண்டீரவா ஸ்டூடியோவில் ரூ.7 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு சார்பில், நினைவு மண்டப திறப்பு விழா வரும் நவம்பர் 29ம்தேதி நடைபெற உள்ளது. இந்த விழா ஏற்பாடு குறித்து கர்நாடக செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் ரோஷன்பெய்க் கூறியதாவது: ராஜ்குமார் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால், அமிதாப்பச்சன், நடிகைகள் சரோஜா தேவி ஆகியோருக்கு அரசு சார்பில் அழைப்புவிடுக்கப்படும் என்றார்.
இதுகுறித்து டாக்டர். ராஜ்குமார் பிரதிஷ்டானா அமைப்பின் செயலாளர் ரவிகுமார், கூறுகையில், இந்த நினைவு மண்டபத்தில் 800 இருக்கைகள் கொண்ட திறந்த வெளி அரங்கம், மினி குளம், ராஜ்குமாரின் 3 அடி உயர வெண்கல சிலை, தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
ராஜ்குமாரின் சமாதியும் இதே இடத்தில்தான் உள்ளதால், இனிமேல் இது ராஜ்குமார் புண்ணிய பூமி என்று அழைக்கப்படும். மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வருவதால் சுற்றுலா தலமாகவும் மாறிவிட்டது என்றார்.
Post a Comment