கோவா இந்தியன் பனோரமாவில் திரையிட 'குற்றம் கடிதல்'படம் தேர்வு

|

கோவா: கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘இந்தியன் பனோரமா' பிரிவில் திரையிட, தமிழில் இருந்து 'குற்றம் கடிதல்' திரைப்படம் தேர்வாகியுள்ளது.

45வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வருடந்தோறும் நடைபெறும் இத் திரைப்பட விழாவில் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட படங்களில் சிறந்தவைகள் தேர்வு செய்யப்பட்டு இந்தியன் பனோரமா என்கிற பிரிவில் திரையிடப்படும்.

அதன்படி இந்தாண்டு இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடுவதற்காக 181 படங்கள் கலந்து கொண்டன. அவற்றில் 26 படங்கள் திரையிடத் தேர்வு செய்யப்பட்டன, அதில் தேர்வாகியுள்ள ஒரே தமிழ்ப் படம் ‘குற்றம் கடிதல்' மட்டுமே. பிரம்மா. ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். ஜே.எஸ்.கே நிறுவனம் தயாரித்துள்ளது.

கோவா இந்தியன் பனோரமாவில் திரையிட 'குற்றம் கடிதல்'படம் தேர்வு

தங்கமீன்கள்

கடந்த வருடம் தேர்வான 'தங்க மீன்கள்' படமும் இதே ஜே.எஸ்.கே நிறுவனம் தயாரித்த படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் சமர்பணம்

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே. சதீஷ்குமார் கூறியதாவது, "தமிழில் நல்ல படங்கள் வெளிவர வேண்டும் என நினைக்கும் பலருக்கும் இந்த கௌரவத்தை சமர்ப்பிக்கிறேன். இது மேலும் பல திறமைகளை ஊக்குவிக்கவும், உருவாக்கவும் உத்வேகத்தைக் கொடுக்கும்," என தெரிவித்துள்ளார்.

அளவில்லாத மகிழ்ச்சி

"ரொம்ப சந்தோஷமா இருக்கேன். தமிழ் திரையுலகில் இருந்து தேர்வாகி இருக்கும் ஒரே திரைப்படம், அதுவும் நான் தயாரித்திருக்கிறேன் என்ற போது எனது சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

திரில்லர் படம்

'குற்றம் கடிதல்' படத்தைப் பொறுத்தவரை எனது பெயரைத் தவிர மற்ற பெயர்கள் அனைத்துமே புதுசு. திரைப்பட விழாவில் திரையிடுகிற படம் என்றவுடன், திரைக்கதை ரொம்ப மெதுவாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். த்ரில்லர் வகை படம் தான் 'குற்றம் கடிதல்'.

நல்ல கதைகளில் கவனம்

கடந்த ஆண்டு 'தங்க மீன்கள்', இந்தாண்டு 'குற்றம் கடிதல்' இப்படி எனது தயாரிப்பு படங்கள் தேர்வாவதைப் பார்க்கும் போது தொடர்ச்சியாக நல்ல கதைகளில் கவனம் செலுத்தி வருகிறேன் என்ற நம்பிக்கை பிறக்கிறது"என்றார்.

குழந்தைகளின் வாழ்க்கை

குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகியுள்ள புதிய படம் ‘குற்றம் கடிதல்'. குழந்தைகளை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களின் வாழ்க்கையை நசுக்கிற கொடுமையை சொல்லும் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அஜய், பிரசித்ரா, சாய் ஆகிய குழந்தைகள் நடித்துள்ளனர். ஜி.பிரம்மா என்பவர் இயக்கியிருக்கிறார். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சங்கர் ரங்கராஜன் இசையமைத்துள்ளார்.

சர்வதேச திரைப்பட விழாக்களில்

இந்தப் படம் ஏற்கனவே ஜிம்பாம்வேயில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டுள்ளது. தற்போது கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment