லைகா பெயர் இல்லாமல் விளம்பரங்கள்... நாளை வெளியாகுமா கத்தி?

|

லைகா நிறுவனத்தின் பெயரை நீக்கிவிட்டு இன்று கத்தி பட விளம்பரங்கள் வெளியாகியிருந்தாலும், நாளை தமிழகத்தில் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கத்தி படப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களான லைகா நிறுவனம் ராஜபக்சேவுடன் தொடர்புள்ளவர்கள் என்று கூறி, அந்த பேனரில் படம் வெளியாவதை அனுமதிக்க மாட்டோம் என தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மாணவர் அமைப்புகள் கூறிவிட்டன.

இந்த சூழலில் படத்தை வெளியிடுவது சரியல்ல என்றும், பண்டிகை நேரத்தில் அத்தனை திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு தருவது இயலாத காரியம் என்றும் தமிழக காவல் துறை கத்தி திரைப்படக் குழுவுக்கு அறிவுரைத்தது.

லைகா பெயர் இல்லாமல் விளம்பரங்கள்... நாளை வெளியாகுமா கத்தி?

ஆனால் படத்திலிருந்து லைகா பெயரையோ, அந்தப் பெயர் வரும் காட்சிகளையோ நீக்க தயாரிப்பாளர்கள் தரப்பில் மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று மட்டும் மூன்று வெவ்வேறு கூட்டங்கள் இந்தப் படம் தொடர்பாக நடந்தது.

இறுதியில் இரவு 10 மணிக்குப் பிறகு, கத்தி படப் பிரச்சினை சுமூகமாக முடிந்தது. திட்டமிட்டபடி படம் வெளியாகிறது என்று மட்டும் அறிவிப்பு வெளியானது. லைகா பெயர் இல்லாமல்தான் படம் வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இது உறுதியாக சொல்லப்படாததால், நேற்று இரவு சத்யம் மற்றும் உட்லண்ட்ஸ் அரங்குகளின் முன்பக்க கண்ணாடி கதவுகள் அடித்து நொறுக்கப்பட்டன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு கத்தி தயாரிப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சந்தித்துப் பேசி வருகின்றனர்.

இன்னொரு பக்கம், சுமூகத் தீர்வு ஏற்பட்டதாகக் கூறுவதை மறுத்து, எதிர்ப்பில் பிடிவாதமாக உள்ளது வேல்முருகன் தரப்பு.

இந்தக் கூட்டத்தில் லைகா பெயர் எந்த இடத்திலும் வராமல் பார்த்துக் கொள்வதாக கடிதம் மூலம் உறுதியளிக்கப்படும் என்று தெரிகிறது. அப்படியே கடிதம் கொடுத்தாலும், படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டி இருக்கும். இன்னும் ஒரு நாள் கூட இல்லாத நிலையில் இது சாத்தியமா என்று தெரியவில்லை.

எனவே படம் வெளியாகுமா என்ற கேள்வி இன்னமும் நீடிக்கிறது.

 

Post a Comment