வன்மம் விமர்சனம்

|

Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா, மதுசூதன் ராவ், ராஜா

ஒளிப்பதிவு: பாலபரணி

இசை: எஸ் எஸ் தமன்

பிஆர்ஓ: நிகில்

தயாரிப்பு: ஹிதேஷ் ஜெபக்

இயக்கம்: ஜெய்கிருஷ்ணா

கன்னியாகுமரியைக் கதைக் களமாகக் கொண்டு வந்திருக்கும் வன்மம், விஜய் சேதுபதிக்கு முதல் ஆக்ஷன் படம்.

விஜய் சேதுபதி - கிருஷ்ணா இருவரும் உயிர் நண்பர்கள். கிருஷ்ணா சுனைனாவைக் காதலிக்கிறார். அந்தக் காதலை கடுமையாக எதிர்க்கும் சுனைனாவின் அண்ணன் மதுசூதன், கிருஷ்ணாவைக் கொல்ல முற்பட, அதைத் தடுத்து நண்பனைக் காக்க விஜய் சேதுபதி முயல, எதிர்பாராதவிதமாக உயிரிழக்கிறார் மதுசூதன்.

வன்மம் விமர்சனம்

இந்த உண்மை தெரியாமல் மறைக்க ஏற்பாடுகள் செய்கிறார் விஜய் சேதுபதி. தனது செல்வாக்கு மற்றும் துணிச்சலைக் காட்டி போலீசை ஊமையாக்குகிறார்.

எல்லாம் நண்பனுக்காக. ஆனால் அந்த நண்பன் கிருஷ்ணா சந்தேகத்தோடு ஒரு வார்த்தையை விட, மனம் புண்படும் விஜய் சேதுபதி அந்த நிமிடமே கிருஷ்ணாவை ஒதுக்கிவிடுகிறார். இருவருக்கும் வன்மம் ஜென்மப் பகையாய் வளர்கிறது.

வன்மம் விமர்சனம்

இறந்துபோன மதுசூதன் குடும்பத்துக்கு ஆதரவாக விஜய் சேதுபதி செயல்பட, அந்த மதுசூதனின் எதிரியான ஜேபியிடம் சேர்கிறான் கிருஷ்ணா. பகை இன்னும் வீர்யமெடுக்கிறது. இந்தப் பகையை எப்படி இருவரும் வெல்கிறார் என்பது கடைசி ஒரு நிமிடக் காட்சி.

கதையில் பெரிய அழுத்தமில்லாததும், கிருஷ்ணாவின் பொருத்தமற்ற நடிப்பும் படத்தோடு நம்மை ஒன்றவிடாமல் செய்தாலும், விஜய் சேதுபதிக்காக இறுதிக் காட்சி வரை அமர்ந்திருக்கிறோம். அவரும் ஏமாற்றவில்லை. கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு இளைஞராகவே மாறியிருக்கிறார். வேட்டியை மடித்துக் கட்டியபடி புல்லட்டில் அவர் வருவதே தனி அழகுதான். ஆக்ஷன் காட்சிகளில் மிக அருமையாக நடித்துள்ளார். அதுவும் மதுசூதனுடன் மோதும் அந்தக் காட்சியில் அவர் உழைப்பும் படமாக்கப்பட்ட விதமும் அபாரம்.

வன்மம் விமர்சனம்

கிருஷ்ணாவுக்கு இந்த வேடமும் பொருந்தவில்லை, அவரும் உணர்ந்து நடித்ததாகத் தெரியவில்லை. சில காட்சிகளில் என்ன ரியாக்ஷன் காட்டுவதென்றே தெரியாமல் நிற்கிறார்.

சுனைனா இன்னும் ஒல்லிப்பிச்சானாக மாறியிருக்கிறார். சொன்ன வேலையைச் செய்துவிட்டுப் போகிறார். விஜய் சேதுபதிக்கு ஒரு ஜோடி இருக்கிறது. ஆனால் மூன்றே காட்சிகள்தான். பெரும்பாலும் அழுதுவடிந்துவிட்டுப் போகிறார் அந்தப் பெண்.

வன்மம் விமர்சனம்

கோபக்கார, ஆனால் நல்லவராக வரும் மதுசூதன், சூதின் வடிவாக வரும் ராஜா, முத்துராமன், போஸ் வெங்கட், விஜய் சேதுபதியின் தந்தையாக வரும் பெரியவர், மதுசூதனனின் ட்ரைவர் மற்றும் அடியாள்.. இவர்கள் தங்கள் பங்கை நிறைவாகவே செய்துள்ளனர்.

வன்மம் விமர்சனம்

இசை, பாடல்கள், பின்னணி இசை எதுவும் தேறவில்லை. ஆனால் பாலபரணியின் ஒளிப்பதிவு, நம்மை குமரி மாவட்ட லொகேஷன்களுக்கே அழைத்துப் போகிறது.

ஜெய்கிருஷ்ணாவுக்கு இது முதல் படம். காட்சிகளுக்கு தந்த முக்கியத்துவத்தை, கதையமைப்புக்குத் தரத் தவறியிருக்கிறார்.

வன்மம் விமர்சனம்

உயிரே போனாலும் நண்பனைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று காலகாலமாகச் சொல்லப்பட்டு வரும் தமிழ் சினிமாவில், அப்படிக் காட்டிக் கொடுத்தாலும் அதை மன்னிக்கத் தெரிந்த பக்குவம் கொண்டதே நல்ல நட்பு என்று முடிகிறது படம். சாத்தியமா என்ன.. சொல்லுங்க மக்களே!

 

Post a Comment