'ஆஸ்கர்' செல்லும் ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர்

|

மும்பை: என்னது ஹேப்பி நியூ இயர் ஆஸ்கருக்கு போகுதா என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். ஆஸ்கர் விருது அல்ல படத்தின் திரைக்கதை ஆஸ்கர் நூலகத்தில் வைத்து பாதுகாக்கப்பட உள்ளது. இப்பொழுது நிதானமாக செய்தியை படியுங்கள்.

தோழி ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், போமன் இரானி உள்ளிட்டோர் நடித்த ஹேப்பி நியூ இயர் படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

வசூல் மழையை நினைத்து சந்தோஷத்தில் இருந்த ஃபரா கானுக்கு தற்போது மேலும் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கொண்டாடுவதற்கு மேலும் ஒரு காரணம்!! ஹேப்பி நியூ இயர் திரைக்கதை ஆஸ்கர் நூலகத்திற்கு செல்கிறது!! என சக எழுத்தாளர்களான மயுர்புரி மற்றும் அல்தியாவுக்கு முத்தங்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள திரைக்கதைகள் மாணவர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா துறையில் உள்ளவர்கள் ஆய்வுக்காக பயன்படுத்தலாம். இந்த நூலகத்தில் 11 ஆயிரம் படங்களின் திரைக்கதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment