சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து, நடிகர் குமரிமுத்துவை நீக்கும் தீர்மானத்தை அமல்படுத்த சென்னை சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை, தி.நகரில் உள்ள நடிகர் சங்கத்தின் இடத்தில் கட்டுமானம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தால் சங்கத்துக்கு ரூ. 150 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல் குறித்து வெள்ளை அறிக்கை அனுப்பும் படி, நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச் செயலர் ராதாரவிக்கு சிரிப்பு நடிகர் குமரிமுத்து கடிதம் ஒன்றை அனுப்பினார்.
இதையடுத்து, குமரிமுத்துவிடம் விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்தில் இருந்து 'நோட்டீஸ்' ஒன்று அனுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குமரிமுத்து, கடந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் விளக்கமும் அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக, நடிகர் சங்கத்தில் இருந்து குமரிமுத்துவை நீக்குவது என நிர்வாகக் குழு முடிவெடுத்தது. அந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கி, கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை எதிர்த்து, சென்னை சிவில் நீதிமன்றத்தில் குமரிமுத்து மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், அவர் ‘பத்திரிகைகளில் வந்த செய்திகளால், நடிகர் சங்கத்தின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டது, உறுப்பினர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது குறித்து, சங்கத்தின் தலைவர்களுக்கு, கடிதம் அனுப்பினேன். விதிமுறைகளை நான் மீறவில்லை. எனவே, நடிகர் சங்க உறுப்பினரில் இருந்து, என்னை நீக்கியது செல்லாது என, உத்தரவிட வேண்டும்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சட்ட விரோதமானது என, உத்தரவிட வேண்டும். தீர்மானத்தை அமல்படுத்த, தடை விதிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சிவில் நீதிமன்றம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமல்படுத்த, இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை, டிசம்பர் 11ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
Post a Comment