"வேதனை தீரலாம்.. வெறும் பனி விலகலாம்"... ருத்ரய்யாவின் முத்திரை மீண்டும் வருமா?

|

-சுதா அறிவழகன்

சென்னை: இன்றைய சினிமா ரசிகர்களுக்கு தெரியாத பெயர்தான் ருத்ரய்யா.. ஆனால் சினிமாவின் காதலர்களுக்கு, அதுவும் நல்ல சினிமாவின் விசுவாசிகளுக்கு ருத்ரய்யா ஒரு மூச்சுக் காற்று போல... அவர் எடுத்தது இரண்டு படங்கள்தான் என்றாலும், அந்த இரண்டுமே இந்த சினிமா விசுவாசிகளுக்கு இரு கண்கள் போல.

எந்த ஒரு நல்ல படத்தையும் இந்த இரு பட கண்ணாடி கொண்டு பார்த்து பகுத்தறியும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவை இந்த இரு படங்களும். ருத்ரய்யாவின் முகம் கூட பலருக்கு நினைவில் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அவள் அப்படித்தான், கிராமத்து அத்தியாயம் ஆகிய அவரது இரு படங்களும் காலத்தால் மறக்க முடியாதவை.

எனக்கு அவ்வளவாக சினிமா ஞானம் இல்லாத அந்த வயதில் இந்த இரு படங்களின் பாடல்களையும் கேட்டபோதெல்லாம் மனதைப் பிசைந்து வலியைக் கொடுத்துள்ளன. ஒரு வேளை இளையராஜாவின் இசைக்காக, இளையராஜாவின் காதலன் என்பதால், அந்த வலி ஏற்பட்டிருக்கலாம். ஆனால் காலப் போக்கில் இந்த இரு படங்களையும் பார்க்க நேர்ந்தபோது வலி இன்னும் அதிகமானது. அதிலும் அவள் அப்படித்தான் படத்தைப் பார்த்தபோது அந்த வலி கூடுதலாகிப் போனது.

கதை என்றால் என்றே தெரியாமல் இன்று பலர் படம் எடுக்கிறார்கள். கதையே இல்லாமல் படம் எடுப்பவன் நான் என்று கூட பலர் பெருமையாக சொல்லிக் கொள்ளும் காலம் இது. நாலு பாட்டு, ஐந்து பைட்டு, ஒரு குத்தாட்டம், சில பல பன்ச்சுகள் என்று வணிகமயமாகிப் போன சினிமா காலம் இது. ஆனால் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, இளையராஜா என்று பெரும் பெரும் ஜாம்பவான்களை வைத்துக் கொண்டு அவள் அப்படித்தான் படத்தை உருவாக்கியவர் ருத்ரய்யா.

கிடைத்த நேரத்தில் பார்ட் டைம் நடிகர் போல இந்தப் படத்திற்காக நடித்துக் கொடுத்தவர் கமல்ஹாசன். நட்புக்காக நல்ல இசை.. அல்ல.. அல்ல.. உயிரை ஊடுறுவும் உணர்ச்சி மிக்க இசையைக் கொடுத்தார் இளையராஜா. நல்ல நடிகராக பண்பட்ட நடிப்பில் இதில் வித்தியாசமான ரஜினியைப் பார்க்க முடிந்தது.. ஸ்ரீபிரியாவுக்கு ஒரு புதுமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் இதுதான்.

அந்தக் காலத்தில் இந்தப் படத்தின் கதை கரு புரட்சிகரமானது. நிச்சயம் சந்தேகம் இல்லை. இன்று இப்படிப்பட்ட படத்தை எடுப்பது என்பது நிச்சயம் பெரிய விஷயமில்லைதான். ஆனால் ருத்ரய்யாவின் துணிச்சல்... அவரது உண்மையான "ஆறுமுகத்திற்கு"க் கூட வந்திருக்க வாய்ப்பில்லை. ஆறுமுகமாக இல்லாமல் ருத்ரய்யாவாக அவதாரம் எடுத்ததால்தான் அவள் அப்படித்தான் படத்தை அவரால் தைரியமாக பிரசவிக்க முடிந்தது.

வழக்கமாக நாயகிகளை மையமாக வைத்து புரட்சிகரமான படங்களை எடுப்பவர்களில் கே.பாலச்சந்தர்தான் முதன்மையானவராக பார்க்கப்படுகிறார். ஆனால் அவரை விட மிகுந்த துணிச்சலுடன் தனது அவள் அப்படித்தான் படத்தை உருவாக்கியவர் ருத்ரய்யா. நிச்சயம் பாலச்சந்தரே கூட இந்தப் படத்தைப் பார்த்து வியந்திருக்கலாம்.. !

என்னால் கூட இப்படிப்பட்ட படத்தை இயக்க முடியாது என்று பாரதிராஜாவும் கூட பகிரங்கமாக ஒத்துக் கொண்டு பாராட்டிய படம் அவள் அப்படித்தான்.

படத்தில் வந்த வசனங்களும் சரி, காட்சி அமைப்புகளும் சரி பொட்டில் அடித்தது போல பொறி பறப்பதாக இருக்கும். பெண்ணியம், ஆணாதிக்கம், கட்டுப்பாடு, பாலியல் விரக்திகள், காதல், காமம் என பல முக்கிய விஷயங்களை, பட்டென்று போட்டு உரசிப் பார்த்திருப்பார் ருத்ரய்யா.. அதற்கெல்லாம் நிச்சயம் ஒரு தைரியம் வேண்டும். வீரியமான சிந்தனையும் வேண்டும். அது ருத்ரய்யாவிடம் இருந்ததால் சாதனைப் படமாக மாறிப் போனது அவள் அப்படித்தான்.

உறவுகள் தொடர் கதை.. உணர்வுகள் சிறுகதை.. இந்தப் பாடல் வரிகள் நிச்சயம் ருத்ரய்யாவுக்கும் பொருந்தும்.. அவரது படங்களின் எண்ணிக்கை 2 ஆக மட்டுமே இருந்தாலும் கூட இன்னும் இன்னும் பல சகாப்தங்களுக்கு ருத்ரய்யாவின் நல்ல சினிமா சிந்தனையும், அவரது தணியாத, பாதியிலேயே முடங்கிப் போன கலை வேட்கையும் பேசப்படும். சிலாகிக்கப்படும்.. சிந்தினையில் இருத்தி வைக்கப்படும்.

 

Post a Comment