சென்னை: நடிகர்களை கேவலமாகப் பேசிய நடிகர் சங்க செயலாளர் ராதாரவியையும், துணைத் தலைவர் காளையையும் நீக்கிவிட்டு என்னை சங்கத்திலிருந்து நீக்குங்கள் என சரத்குமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.
நடிகர் சங்கத்தைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பி வரும் விஷாலை சங்கத்திலிருந்து நீக்கவும் தயங்க மாட்டேன் என்று சங்கத்தின் தலைவர் சரத்குமார் நேற்று கூறியிருந்தார்.
இதற்கு உடனடியாக பதில் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். தனது அறிக்கையில், "சங்கத் தலைவர் சரத்குமாரிடமிருந்து இப்படி ஒரு பேச்சைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நடிகர் சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் மதிக்கிறேன். அவர்கள் என்னை வெளியேற்றினால் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.
ஆனால், நீக்குவதற்கு முன் நான் சங்கத்துக்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டேன் என்பதற்கான ஆதாரத்தை சரத்குமார் காட்ட வேண்டும்.
சங்கத்தின் செயலாளர் ராதாரவியும், துணைத் தலைவர் காளையும் சங்க உறுப்பினர்களை தரக்குறைவாக, அதிலும் ‘நாய்கள்' என்று பேசிய பேச்சுகள் என் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டன. சங்க விதி 13-ன்படி சங்க உறுப்பினர்களைக் காயப்படுத்தும் விதமாகப் பேசுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கலாம். அதன்படி முன்பு அப்படிப் பேசிய சீனியர் நடிகர் குமரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சங்கத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்.
இப்போது ராதாரவியும், காளையும் அப்படிப்பட நடவடிக்கைக்கு உரியவர்கள்தான். நீதி என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே. எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து, ராதாரவியும், காளையும் விலக்குங்கள்," என்று கூறியுள்ளார்.
இப்போது நெருக்கடி சரத்குமாருக்குதான். என்ன செய்யப் போகிறார் நாட்டாமை.. கூடிப் பேசி சமாதான அறிக்கை விடுவார்களோ!
Post a Comment