தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ரஜினியின் லிங்கா படம் தமிழகத்தில் 700 அரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமா இதுவரை காணாத பிரமாண்டம் மற்றும் கோலாகலத்துடன் லிங்கா நாளை டிசம்பர் 12-ம் தேதி வெளியாகிறது.
‘லிங்கா' படத்துக்கு எதிராக சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. லிங்கா கதை தங்களுடையது என்று வழக்கு தொடர்ந்தவர்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.
ஆனால் ‘லிங்கா' படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றங்கள் மறுத்துவிட்டன. இரு வழக்குகளுமே ஒத்திப் போடப்பட்டுவிட்டன.
இதையடுத்து உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் ‘லிங்கா' நாளை வெளியாகிறது. தமிழ் நாட்டில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. டிக்கெட் முன்பதிவுகள் சில தினங்களாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் மொத்தமே 968 அரங்குகள்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலைக்குள் அனைத்து தியேட்டர்களிலும் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.
இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறும் போது, "டிசம்பர் மாதம் பொதுவாக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரத்து மந்தமாகவே இருக்கும். இந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லிங்கா' படம் வருவது திரையரங்கு உரிமையாளர்களுக்கு வரப் பிரசாதமாகும். ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. அனைத்து தியேட்டர்களும் நாளை முதல் நிரம்பி வழியப்போகிறது. தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். ரஜினிக்கு திரையுலகம் நன்றி செலுத்த வேண்டிய நேரம் இது," என்றார்.
சென்னையில்...
சென்னையில் சத்யம், சாந்தம், செரீன், சிசன், தேவி, தேவி பாரடைஸ், தேவிகலா, தேவிபாலா, எஸ்கேப், வீனஸ், ஸ்ட்ரீக், ஸ்பாட், வேவ், உட்லண்ட்ஸ், சிம்பொனி, ஐநாக்ஸ் ஸ்கிரீன் 1,2,3,4, சாந்தி, சாய்சாந்தி, ஆல்பட், பேபி ஆல்பட், அபிராமி, ஸ்வர்ணசக்தி அபிராமி, அன்னை அபிராமி, பால அபிராமி, சங்கம், பத்மம், ரூபம், பி.வி.ஆர் (4 அரங்குகள்), எஸ் 2 பெரம்பூர் (4 அரங்குகள்), கமலா, கமலா மினி, உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன், ஐ டிரீம்ஸ், மகாராணி, பாரத், காசி, ஸ்ரீபிருந்தா, சைதை ராஜ் போன்ற தியேட்டர்களில் ‘லிங்கா' படம் திரையிடப்படுகிறது.
காசி தியேட்டரில் நள்ளிரவு 12 மணிக்கு ரஜினி ரசிகர்கள் சைதை ஜி.ரவி தலைமையில் ரஜினி பிறந்த நாள் ‘கேக்‘ வெட்டுகின்றனர். சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ராமதாஸ், சூர்யா, ரவி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டுள்ளன. அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் ரஜினி கட்அவுட்கள் வைத்துள்ளனர். கொடி தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
நடிகர், நடிகைகள் பலர் சிறப்பு காட்சியில் ‘லிங்கா' படம் பார்க்க தயாராகிறார்கள். நடிகர் தனுஷ் மாரி படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டு ‘லிங்கா' படம் பார்க்க சென்னை வந்துள்ளார்.
சிவகார்த்திகேயன், சிவா, சிம்பு, சந்தானம் போன்றவர்களும் நள்ளிரவுக் காட்சியைக் காணத் தயாராகிறார்கள்.
Post a Comment