திலீப் - மஞ்சு வாரியார் விவாகரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் நடிகை காவ்யா மாதவன்.
மலையாள நடிகர் திலீப்புக்கும், நடிகை மஞ்சுவாரியருக்கும் 1998-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். திருமணத்துக்கு பிறகு மஞ்சு வாரியர் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். இருவரும் பரஸ்பர ஒப்புதலின் பேரில் விவாகரத்தும் பெற்றுவிட்டனர்.
இதையடுத்து மஞ்சுவாரியர் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். அவர் நடித்த ஹவ் ஓல்ட் ஆர் யு பெரும் வெற்றி பெற்றது. பல மலையாளப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ள அவர், அடுத்து தமிழ் படங்களிலும் நடிக்கப் போகிறார்.
திலீப்-மஞ்சுவாரியர் விவாகரத்துக்கு நடிகை காவ்யா மாதவன்தான் காரணம் என்று நீண்ட நாட்களாகவே பேசப்படுகிறது.
மலையாளத்தில் திலீப் ஜோடியாக நிறைய படங்களில் நடித்துள்ளார் காவ்யா. இவருக்கு 2009-ல் திருமணமாகி, கணவனின் கொடுமை காரணமாக ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்றுவிட்டார்.
தற்போது மீண்டும் திலீப்புடன் இணைந்து நடித்து வருகிறார். திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கும் ஏற்கனவே காதல் இருந்ததாகவும், இருவரின் நெருக்கம் தெரிந்ததால்தான் மஞ்சு வாரியார் பிரிந்தார் என்றும் செய்திகள் வந்தபடி உள்ளன.
இதனை காவ்யா மாதவனிடம் நேரடியாகவே கேட்டுவிட்டனர் செய்தியாளர்கள்.
இதற்கு பதிலளித்த அவர், "ஏற்கெனவே பலமுறை நான் இந்த கேள்விக்கு பதில் கூறிவிட்டேன். அவர்கள் வீட்டில் நடக்கும் எல்லாவற்றுக்கும் நான்தான் பொறுப்பு என்பதா? இதுபோன்ற தவறான செய்திகளைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்," என்றார்.
Post a Comment