சர்ச்சைக்குரிய தி இன்டர்வியூ படத்தை யுட்யூபில் வெளியிடுகிறது சோனி!

|

சர்ச்சைக்குரிய தி இன்டர்வியூ படத்தை யு ட்யூபில் வெளியிடுகிறது சோனி பிக்சர்ஸ் நிறுவனம்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இரண்டு செய்தியாளர்கள் கொலை செய்வது போல சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள காமெடிப் படம் தி இன்டர்வியூ.

இந்தப் படத்தின் கதை வெளியில் தெரிந்ததுமே, வட கொரியா இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என சோனியை நேரடியாகவே எச்சரித்தது. இதைத் தொடர்ந்து சோனி நிறுவனத்தின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கை முற்றாக செயலிழக்க வைத்தனர் சில ஹேக்கர்கள். இது வட கொரியாவின் வேலைதான் என தகவல் வெளியிட்டது அமெரிக்க உளவுத் துறை.

சர்ச்சைக்குரிய தி இன்டர்வியூ படத்தை யுட்யூபில் வெளியிடுகிறது சோனி!

மேலும் சோனி நிறுவனம், அதன் தலைவர், படத்தின் தயாரிப்பாளர், சோனி ஊழியர்கள் போன்றவர்களின் அலுவல் ரீதியான மற்றும் தனிப்பட்ட தகவல்களைக் கூட கைப்பற்றிய ஹேக்கர்கள், அவற்றை வெளியிட்டனர். ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கதையைக் கூட சோனி நிறுவன சர்வர்களிலிருந்து உருவி வெளியிட்டனர் இந்த ஹேக்கர்கள். அதே நேரம் இந்த ஹேக்கர்களுக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வட கொரிய அரசு அறிவித்துவிட்டது.

இதைத் தொடர்ந்து படத்துக்கு திரையரங்குகள் தர பல மால்களும் தயக்கம் காட்டின. சினிமார்க், சினிப்ளெக்ஸ், ரீகல் சினிமாஸ், ஏஎம்சி போன்ற வட அமெரிக்க சினிமா அரங்குகளில் படத்தின் பிரிமியர் நிறுத்தப்பட்டுவிட்டது. உடனே, தி இன்டர்வியூ படத்தை வெளியிடுவதை ரத்து செய்தது சோனி. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த முடிவு தவறு என்று கூறியும், படத்தை திரையிடவில்லை சோனி.

இப்போது தி இன்டர்வியூ படத்தை யு ட்யூப், நெட்ப்ளிக்ஸ், க்ராக்கிள் போன்ற சமூக வலைத் தளங்களில் வெளியிடப் போவதாக சோனி நிறுவனத் தலைவர் மைக்கேல் லிண்டன் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் விநியோகிக்கவும் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment