லிங்கா சிறந்த படம்... குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள் - கே எஸ் ரவிக்குமார்

|

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா ஒரு க்ளாஸ்ஸிக் படம். அதை மக்கள் பெரிதும் ரசிக்கிறார்கள். குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள், என்றார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்க, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்து டிசம்பர் 12-ம் தேதி வெளியான படம் லிங்கா.

மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியான அந்தப் படம், வரலாறு காணாத ஓபனிங்குடன் ஓடிக் கொண்டுள்ளது.

லிங்கா சிறந்த படம்... குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள் - கே எஸ் ரவிக்குமார்

இந்தப் படம் ரூ 104 கோடியை முதல் மூன்றே தினங்களில் குவித்துவிட்டது. இன்றும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் படத்துக்கு எதிராக சிலர் எதிர்மறைக் கருத்துக்களைப் பரப்பி வருவது குறித்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரிடம் கேட்டபோது, "ரஜினி சாரின் கேரியரில் மிகச் சிறந்த படங்களில் ஒன்று லிங்கா. இது ஒரு க்ளாஸிக் படம் எனலாம். ரஜினிக்கு மிகப் பிடித்த படம்.

மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக படத்தைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். அனைத்துத் தரப்பிலும் படம் குறித்து மிக நல்ல கருத்துகள் வெளிவந்துள்ளன.

அதே நேரம் சிலர் எதிர்மறையாகவும் பேசத்தான் செய்கிறார்கள். அவர்களைத் தடுக்க முடியாது. எல்லோரையும் திருப்திப்படுத்துவது மாதிரி படமெடுக்க முடியுமா என்ன?

குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. நல்ல படம் எடுத்த திருப்தி எனக்கு இருக்கிறது.

எல்லோரும் நீளம் அதிகம் என்றார்கள். அதற்காக சில காட்சிகளை மட்டும் குறைத்துள்ளேன்.

விடுமுறை நாட்களே இல்லாத, பரீட்சை நேரத்தில் இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறோம். இன்னும் இரண்டு நாட்களில் பரீட்சை முடிந்த பிறகு இந்தப் படத்துக்கு மேலும் அதிக கூட்டம் வரும்," என்றார்.

 

Post a Comment