புரட்சிகர வசனம் பேசும் நாதஸ்வரம் சீரியல் நாயகிகள்!

|

அதிகாலையில்தான் நாதஸ்வரத்தின் மங்கல இசையை கேட்க அனைவரும் விரும்புவார்கள். ஆனால் சன்டிவியில் கடந்த 1230 நாட்களாக இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் சீரியலை பார்த்த பின்னர்தான் தமிழகத்தில் எண்ணற்ற தாய்மார்களுக்கு இரவு உணவே உள்ளே போகும்.

இரவு 7.30 மணியில் இரவு 8.மணிவரை வீட்டிலோ, காம்பவுண்டிலோ ஏதாவது திருடு போனால் கூட கவலைப்படாமல் சீரியலில் மூழ்கிவிடுவார்கள். அந்த அளவுக்கு நாதஸ்வரத்தின் மீதான ஈர்ப்பு அதிகம் நம் இல்லத்தரசிகளுக்கு. அதனால்தான் ஆயிரமாவது எபிசோடில் காரைக்குடியில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு கின்னஸ் சாதனை படைத்தது.

புரட்சிகர வசனம் பேசும் நாதஸ்வரம் சீரியல் நாயகிகள்!

மெட்டி ஒலி திருமுருகன் இயக்கி வரும் நாதஸ்வரம் தொடர் அண்ணன், தம்பி குடும்பத்தின் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதுதான் என்றாலும் பெண்களுக்காக புரட்சிகரமான சிந்தனைகளைப் பற்றி பேசுகிறது. ஆண்களின் இருதார மனத்தைப் பற்றி பல சீரியல்கள் எடுக்கப்பட்டாலும், நாதஸ்வரத்தில் நடிக்கும் பெண் கதாபாத்திரங்கள் பலரும் மறுமணம் செய்து கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

புரட்சி கதாநாயகிகள்

கதாநாயகி மலர், மற்றொரு கதாநாயகி மகா, மலரின் தங்கை ரோகினி, கோபியின் தங்கை ராகினி என பலரும் மறுமணம் செய்து கொண்டவர்கள்தான். இதில் மலர், மகா ஆகியோருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் கூட புரட்சிகரமானதாகவே இருக்கிறது.

புரட்சிகர வசனம் பேசும் நாதஸ்வரம் சீரியல் நாயகிகள்!

மகாவின் சாட்டையடி

வாழ்க்கை கொடுத்த கணவனே கண் கண்ட தெய்வம் என்ற மாதிரியான வசனங்கள் எல்லாம் இந்த சீரியலில் கிடையாது. அதற்கு பதிலாக வாழ்க்கை சரியில்லையா? தாலியை கழற்றி வீசு என்கிற ரீதியிலான வசனங்கள்தான் வைக்கப்பட்டுள்ளன.

சொக்கு - மயிலு

சொக்கலிங்கம் - மயிலு அண்ணன் தம்பிக்கு இடையேயான பாசம் இதில் மிகைப்படுத்தப்பட்டதாகவே இல்லை. இருவரும் சொந்த அண்ணன் தம்பிகளாகவே வாழ்கின்றனர்.

புரட்சிகர வசனம் பேசும் நாதஸ்வரம் சீரியல் நாயகிகள்!

கோபி - பிரசாத்

ஆனால் இன்றைய தலைமுறை சகோதரர்களான கோபி - பிரசாத் இடையே இந்த அந்நியோன்யம் இல்லை. காரணம் சில புல்லுருவிகளின் பேச்சை பிரசாத் கேட்பதால்தான்.

ராகினிக்கு மறுமணம்

ராகினிக்கு கிடைத்த கணவன் சரியில்லை என்பதால் அவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் குகனுக்கு மறுமணம் செய்ய நினைக்கின்றனர். ஆனால் மனவளர்ச்சி சரியில்லாத மகனுக்கு ராகினியை திருமணம் செய்ய அவளை கடத்த நினைக்கிறது ஒரு கும்பல். அந்த திட்டம் நிறைவேறுமா?

மகா - பிரசாத்

சகோதரர்களுக்கு இடையேயான சண்டையில் மகாவை வீட்டை விட்டு வெளியேற்றுகிறான் பிரசாத். அவளே அழுது புலம்பாமல், தாய்வீட்டுக்கு வந்து தாலி ஒரு பொருட்டே இல்லை என்கிற ரீதியில் வசனம் பேசுகிறாள்.

சகோதரர்கள் சேருவார்களா?

ஜோசியர், சுப்புவின் கலகத்தினால் பிரிந்து கிடக்கின்றனர் கோபியும், பிரசாத்தும். ஒருபோது ராசியாக வாய்ப்பே இல்லை என்கிறான் பிரசாத் அவர்கள் மீண்டும் இணைவார்களா? .

புரட்சிகர வசனம் பேசும் நாதஸ்வரம் சீரியல் நாயகிகள்!

கோபியை கொல்ல திட்டம்

இந்த கதைக்கு இடையே கோபியை கொல்ல திருப்பூரில் இருந்து கும்பலாக வந்து சுற்றிக்கொண்டிருக்கிறான் பழனிச்சாமி அவனது திட்டம் நிறைவேறியதா?

1230வது எபிசோட்

எப்படியோ நான்கு ஆண்டுகளாய் நாதஸ்வரம் தமிழகத்தின் இல்லங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 1230வது எபிசோடை எட்டியுள்ள நாதஸ்வரம் எப்படியும் 2000 எபிசோடை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் மலருக்கு குழந்தை பிறந்து விடும், ராகினிக்கு திருமணம் நடத்தி முடித்து விடுவீர்கள்தானே திருமுருகன்?

 

Post a Comment