மது குடித்துவிட்டு போதையில் கார் ஓட்டிய நடிகர் ஜெய்யை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர் அபராதம் செலுத்திவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
சென்னை 28, சுப்ரமணியபுரம், ராஜா ராணி, கோவா, வாமணன், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். முன்னணியில் உள்ள இளம் நாயகர்களில் இவரும் ஒருவர்.
சென்னையில் இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் ஜெய் நேற்று பங்கேற்றார். பின்னர் ராயப்பேட்டையில் இருந்து அடையாறு நோக்கி டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் காரில் சென்றார்.
காரை அவரே ஓட்டினார். மயிலாப்பூர் திருவள்ளூவர் சிலை அருகில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஜெய் காரையும் நிறுத்தினார்கள். காரில் இருப்பது ஜெய் என்பது தெரியாமல் அவரிடம் போதை ஆசாமிகளை கண்டு பிடிக்கும் நவீன கருவியில் ஊதச் சொன்னார்கள். அக்கருவி ஜெய் குடித்து இருப்பதாக காட்டியது.
இதையடுத்து வாகனத்தை ஓரம் கட்ட வைத்தனர். ஜெய்யை கீழே இறக்கினார்கள். போதையில் கார் ஓட்டியதற்காக அவருக்கு அபராதம் வித்தனர். அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் ஜெய்யை அடையாளம் கண்டு கொண்டதும், கூட்டம் கூடியது.
பரபரப்பைத் தவிர்க்க, போலீசாரிடம் அவசர அவசரமாக அபராதம் செலுத்தி ரசீதைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
Post a Comment