சென்னை: தமிழ் சினிமா உலகின் பிதாமகர் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய கே. பாலச்சந்தர் இயக்கிய தொலைக்காட்சி தொடர்கள் இன்றைக்கும் அனைவராலும் விரும்பி ரசிக்கப்படுகிறது.
எத்தனையோ சீரியல்கள் இயக்கியிருந்தாலும் சேட்டிலைட் சேனல்களின் வருகைக்கு முன்னர் 1990ல் தூர்தர்சனில் அவர் தயாரித்து இயக்கிய ‘ரயில் சிநேகம்' இன்றைக்கும் ரசிக்கப்படும் தொடராகும்.
ரயில்சிநேகத்தின் டைட்டில் பாடலும், கதாநாயகியின் கதையைச் சொல்லும் "இந்த வீணைக்குத் தெரியாது... இதை செய்தவன் யாரென்று..." என்ற பாடலும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத நினைவுகளாக இருக்கின்றனர்.
ரயில்சிநேகம் எப்போ வரும் என்று காத்திருக்க ஆரம்பித்தனர் டிவி ரசிகர்கள். ஆணாதிக்க சமூகமாக இருந்த சினிமாவில் பெண்ணியத்தை புகுத்திய பாலச்சந்தர், டிவி சீரியல்களிலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.
சன்டிவியின் வருகைக்குப் பின்னர் கையளவு மனசு, காசளவு நேசம், காமெடி காலனி உள்ளிட்ட தொடர்கள் மூலம் இல்லத்தரசிகளுக்கும் பிடித்த இயக்குநராகிப் போனார்.
ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘அண்ணி' தொடரில் அங்கயற்கண்ணி கதாபாத்திரத்தை அசத்தலாக படம்பிடித்திருப்பார். 15க்கும் மேற்பட்ட "டிவி' சீரியல்களை இயக்கிய பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம், சிறப்பு வாய்ந்த பல டிவி சீரியல்களையும் தயாரித்தது. இன்றைக்கு வெளியாகும் குப்பையான மெகா தொடர்களுடன் ஒப்பிடும் போது பாலச்சந்தரின் சீரியல்கள் காலம் பொற்காலம் என்கின்றனர் டிவி ரசிகர்கள்.
Post a Comment