என்னை அறிந்தால்... போதிய தியேட்டர்கள் கிடைக்காவிட்டால்?

|

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கு அதிக திரையரங்குகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டால், படத்தை தள்ளி வைக்கக் கூடும் என்ற தகவல் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் நிலவி வருகிறது.

அஜீத்தின் என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். அஜீத் படங்கள் ஆரம்ப வசூலில் சாதனைப் படைப்பவை. கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை நிலையான ஆரம்ப வசூல் அஜீத்தின் படங்களுக்குக் கிடைத்துவிடும்.

என்னை அறிந்தால்... போதிய தியேட்டர்கள் கிடைக்காவிட்டால்?

எனவே அஜீத் படத்தைத் திரையிட விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் விருப்பம் காட்டுகின்றனர்.

அதே நேரம் ஐ படம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி இருப்பதால், அந்தப் படத்தை அதிக அரங்குகள் திரையிட தயாரிப்பாளர் முயற்சிக்கிறார். எனவே ஜனவரி முதல் வாரத்திலிருந்தே தமிழகத்தின் பெரிய, நல்ல அரங்குகளை ஆஸ்கர் ரவிச்சந்திரன் முன் பதிவு செய்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அஜீத் படத்துக்கு குறைந்தது 450 அரங்குகள் வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள். அவ்வளவு அரங்குகள் கிடைக்காவிட்டால் படத்துக்கு வரவேண்டிய வசூல் பாதிக்கும் என்பதால் தள்ளி வைக்கலாமா என யோசிப்பதாகக் கூறப்படுகிறது.

ஐ படத்தை ஒரு வாரம் முன்கூட்டியே வெளியிட்டாலும், அஜீத் படம் வரும்போது திரையரங்குகளிலிருந்து ஐ படத்தைத் தூக்க விடுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் பொங்கலுக்கு என்னை அறிந்தால் வருவதையே அஜீத் விரும்புகிறாராம்.

இந்த சிக்கல் எப்படி தீரப் போகிறதென்று கவலையுடன் கவனிக்கிறது கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ்.

 

Post a Comment