ஹைதராபாத்: பழம்பெரும் நடிகரும், பின்னணிக் குரல் கலைஞருமான பி.ஜே.சர்மா மாரடைப்பால் ஹைதராபாத்தில் காலமானார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன், திலீப்குமார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தவர் பழம் பெரும் நடிகர் பி.ஜே.சர்மா (82). தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் பி.ஜே.சர்மா பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இவர் தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். ஜெமினி கணேசனுக்குப் பல படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தது பி.ஜே.சர்மா தான்.
இந்நிலையில், சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த சர்மா, நேற்று ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார்.
சர்மாவின் மறைவிற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், பி.ஜே.சர்மாவின் உடலுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், தெலுங்கு பட உலகினர் ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள சாய்குமார் சர்மாவின் மூத்தமகன் என்பது குறிப்பிடத்தக்கது. சாய்குமாரின் மகன் ஆதியும் தற்போது நாயகனாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.
Post a Comment