ரஜினிகாந்தின் லிங்கா படத்தை இன்று இந்தியில் வெளியிடுகிறது ஈராஸ் நிறுவனம். ஆனால் பெரிய விளம்பரங்கள், புரமோஷனல் நிகழ்ச்சிகள் இல்லாமல் இந்தப் படம் வெளியாகிறது.
லிங்கா படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிடத் திட்டமிட்டனர். ஆனால் தமிழ், தெலுங்கில் மட்டுமே அன்றைக்கு வெளியிட்டனர். இந்தி வெளியீட்டை தள்ளி வைத்தனர்.
இன்று இந்திப் பதிப்பு வெளியாகிறது. ஆனால் இதற்காக பெரிய அளவில் விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் எதுவுமே இல்லை. இந்திப் பதிப்புக்கு இசை வெளியீட்டு விழா கூட நடத்தப்படவில்லை. ஏஆர் ரஹ்மான் இசையமைத்தும் கூட இசை வெளியீட்டு விழா நடத்தப்படாதது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கில் மூன்று மணி நேரம் ஓடிய இந்தப் படம், இந்தியில் இரண்டரை மணி நேரத்துக்கும் குறைவான படமாக ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. பாடல்கள் குறைக்கப்பட்டு, தேவையற்ற பல காட்சிகள் தூக்கப்பட்டுள்ளன.
இந்தியின் முன்னணி நடிகையான சோனாக்ஷி சின்ஹாவும், தென் இந்தியாவின் முன்னணி நடிகை அனுஷ்காவும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளனர். கே எஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார்.
மும்பையில் மட்டும் 65 அரங்குகளில் லிங்கா வெளியாகிறது. வட மாநிலங்களின் பிற பகுதிகளிலும் கணிசமான அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர்.
Post a Comment