பணம் பறிக்க நடிகை மாதுரி தீக்சித்துக்கு எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் விடுத்த ஹோட்டல் வெயிட்டர்

|

மும்பை: உங்கள் மகன்களை கொன்றுவிடுவேன் என்று பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித்துக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய ஹோட்டல் வெயிட்டர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித் தனது டாக்டர் கணவர் மற்றும் 2 மகன்களுடன் மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி அதிகாலை அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் மாதுரியின் மகன்களை கொல்லப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 3 நாட்களுக்கு தொடர்ந்து இது போன்ற மிரட்டல் எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளன.

பணம் பறிக்க நடிகை மாதுரி தீக்சித்துக்கு மிரட்டல் விடுத்த வெயிட்டர்

ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் தனக்கும் நிழல் உலக தாதாவான சோட்டா ராஜனுக்கும் தொடர்பு உள்ளது என்றும், மாதுரியின் மகன்களை கொல்லாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என்றும், அதை தான் ஆயுத பயிற்சி அளித்துள்ள 15 வயது சிறுவன் வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து மாதுரியின் உதவியாளர் போலீசில் கடந்த 28ம் தேதி புகார் தெரிவித்தார். அவரது புகாரின்போரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி ஹோட்டலில் வெயிட்டராக உள்ள பிரவீன் குமார் பிரதான்(23) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். மேலும் முன்னதாக பல பாலிவுட் பிரபலங்களுக்கு இது போன்று மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். பிரதானுக்கும் நிழல் உலக தாதாவுக்கும் உண்மையிலேயே தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Post a Comment