புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிரஞ்சீவி

|

ஹைதராபாத்: தன்னுடன் புகைப்படம் எடுக்கவும், நடனமாடவும் ஆசைபட்ட புற்று நோய் பாதித்த சிறுவனின் ஆசையை நடிகர் சிரஞ்சீவி நிறைவேற்றியுள்ளார். அந்த சிறுவனுக்கு தனது 150வது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் சிரஞ்சீவி.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் ஆபேகாம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர்-பத்மா தம்பதி மகன் பாலு பத்து வயதாகும் இந்த சிறுவன், புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிரஞ்சீவி

மரணத்தின் வாசலில் இருக்கும் அந்த சிறுவனுக்கு தனது அபிமான நடிகர் சிரஞ்சீவியை பார்க்க வேண்டும் என்பது ஆசை. தனது ஆசையை தொண்டு நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்திருக்கிறான் இந்த சிறுவன்.

இதை அறிந்த நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி, சிறுவன் பாலு சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேற்று வந்து சந்தித்தார்.

சிறுவன் பாலுவுக்கு பழங்கள் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்த சிரஞ்சீவி, ஆஞ்சநேயர் கோவிலில் வழிபட்ட கயிறை அவன் கையில் கட்டி விரைவில் பூரண குணம் அடைந்து வீடுதிரும்புவாய் என்று ஆசி வழங்கினார்.

சிரஞ்சீவியை நேரில் பார்த்த சிறுவன் பாலு, மகிழ்ச்சியில் அவருடன் ஆடிப்பாட விரும்புவதாக கூறினான். இதை கேட்ட சிரஞ்சீவி, தனது 150வது படத்தில் அவனுக்கு நடிக்க வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்தார்.

இதை கேட்டு பாலு மகிழ்ச்சி அடைந்தான்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிரஞ்சீவி, சிறுவன் பாலு பூரண குணமடைய வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற நோயாளிகளுக்கு பிரபலங்கள் பலர் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

Post a Comment