'குரு' பாலச்சந்தர் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் 'சீடர்' கமல்ஹாசன்

|

சென்னை: அமெரிக்காவிலுள்ள நடிகர் கமல்ஹாசன் மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் உடல் தகன நிகழ்வில் பங்கேற்க இன்றிரவு சென்னை திரும்புகிறார். ஆனால் முன்கூட்டியே தகனம் நடைபெறுவதால் அவரால் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாது.

உத்தமவில்லன் திரைப்படம் சார்ந்த சூட்டிங்கிற்கு பிந்தைய பணிகளுக்காக அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் சென்றிருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில் இயக்குநர் பாலச்சந்தர் இறந்த செய்தி நேற்றிரவு அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்னைவர கமல் ஆயத்தமானார்.

'குரு' பாலச்சந்தர் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் 'சீடர்' கமல்ஹாசன்

இன்று காலை விமானத்தில் அவர் ஏறியுள்ளார். அந்த விமானம் மூலம் சென்னை வந்து சேர இரவாகிவிடும். பாலச்சந்தரின் இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று மாலையே உடல் தகனம் நடைபெற உள்ளதால் கமல்ஹாசனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னை வந்தடைய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பாலச்சந்தரின் மேலாளர் கூறுகையில் "பாலச்சந்தரின் இறுதி சடங்கு திடீரென இன்று மாலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் கமல்ஹாசனால் அதில் கலந்துகொள்ள முடியாது. இருப்பினும் இன்று இரவு சென்னை வந்து, பாலச்சந்தர் குடும்பத்தாருக்கு கமல் ஆறுதல் தெரிவிப்பார்" என்றார்.

குழந்தை வேடங்களில் நடித்து வந்த கமல்ஹாசனை அரங்கேற்றம் திரைப்படத்தில் நல்ல கதாப்பாத்திரம் கொடுத்து முன்னுக்கு கொண்டுவந்தவர் பாலச்சந்தர். எனவே இருவருக்கும் இடையே நீண்ட காலமாக குரு-சிஷ்யன் உறவு இருந்து வருகிறது. மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைவின்போதும் கமல்ஹாசன் அமெரிக்காவில்தான் இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

 

Post a Comment