சென்னை: சட்டவிரோதமாக தனது பாடல் பதிவுகளை விற்பனை செய்து வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா போலீசில் புகார் அளித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் பிரதீப் குமார் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
நான் தியாகராயநகர் முருகேசன் தெருவில் வசித்து வருகிறேன். நான் தமிழ் திரைப்பட உலகில் கடந்த 40 ஆண்டுகளாக இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறேன்.
இந்த நிலையில் நான் இசையமைத்து பதிவு செய்கின்ற பாடல்களை எனது அனுமதியின்றி வேறு எந்த நிறுவனங்களுக்கும், சி.டி.க்களாகவோ, இதர பதிவுகளாகவோ வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளேன். அது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
பி.நரசிம்மன், ‘அகி மியூசிக் பிரைவேட் லிமிடெட்' அகிலன் லட்சுமண் கிரி டிரேடிங் கம்பெனி, அபிஷேக் ரங்கநாதன் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் கடைகளிலும், இணையதளங்கள் மூலமாகவும் பாடல் பதிவுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
மலேசியாவிலிருந்து இந்தியா வந்து தங்கி இருந்து சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மேற்கண்ட அகிலன் லட்சுமண் மற்றும் அவருக்கு உறுதுணையாக மேற்கண்ட மற்ற நபர்களும் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களது நடவடிக்கைகள் மூலம் எனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி வருகிறார்கள்.
இது சம்பந்தமாக செயல்பட்டு வரும் மேற்கண்ட நபர்கள் மீது கடந்த 22.5.2014 அன்று எனது ரசிகர்கள் கிளப் மூலமாக தங்களிடம் புகார் அளித்தும் மேல் நடவடிக்கை இல்லை.
ஆகவே நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், எனது புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சட்டவிரோதமாக எனது பாடல்களை விற்பனை செய்து வரும் நபர்கள் மீது சட்டப்படி தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்க எடுக்குமாறு ஜார்ஜ் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment