மூவி பண்டிங் எனும் மூடுமந்திரம்!- இயக்குநர் முத்துராமலிங்கன்

|

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, அவ்வளவு ஏன், சினிமாக்காரர்களுக்கும் கூட அவ்வளவாய் விளங்கிக்கொள்ள முடியாத சொல் ‘மூவி ஃபண்டிங்' என்பது.

இந்தக் கட்டுரையை எழுதும் எனக்கும் கூட மூன்று மாதங்களுக்கு முன்வரை, இப்படியான ஒரு சொல்லைத் தெரியாது.

எனது முதல் படம் ‘சிநேகாவின் காதலர்கள்' ரிலீசான இரண்டாவது வாரம். நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும், ‘அஞ்சானுடன்' ரிலீஸ் செய்ய நேர்ந்ததால், சொன்ன தேதிக்கு இரு வாரங்கள் முன்கூட்டியே, திடீரென ‘கதை திரைக்கதை வசனம் இயக்க'த்துடன் பார்த்திபன் உள்ளே புகுந்ததால், தியேட்டர்களே கிடைக்காமல் திண்டாடிய படம். என் சொந்த ஊரில், உறவினர் தியேட்டர் கூடக் கிடைக்கவில்லை. தயாரிப்பாளரின் சொந்த ஊரிலும் இதே நிலை. அவரது உறவினர் தியேட்டரும் கூட கிடைக்கவில்லை.

ஒரு ரெகுலர் தயாரிப்பாளரிடமிருந்து முறையாக எனக்கு அடுத்த படம் வரவேண்டுமெனில் அதை தியேட்டர் வசூல்தான் கொண்டு வரவேண்டும். 'பாவம்யா படம் நல்லாத்தான் எடுத்திருந்தாரு', 'நல்ல தியேட்டர் கிடைக்கலை', 'விளம்பரம் பத்தலை' போன்ற ஆலாபனைகளுக்கெல்லாம் இங்கு இடமில்லை. சுமாரான படம், ஆனாலும் மேலும் ஒன்றிரண்டு வாய்ப்புகள் வருவதென்பது நம் தமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின்களுக்கே சாத்தியம். அல்லது உலகத்தின் எந்த மூலையிலும் ஓடாவிட்டாலும் மனசாட்சியின்றி ஒரு நாற்பது தியேட்டர்களின் பெயரைப்போட்டு எப்படியாவது 100 வது நாள் போஸ்டர் ஒட்டிவிடவேண்டும்.

என் அலுவலகத்தில், வாழ்க்கையில் அடுத்து செய்வதறியாது திகைத்து நிற்கும் ஒரு காலகட்டம் ஒன்று வருமே, அதில் நின்று கொண்டிருந்தேன். சிகரட்டுகள் சில மடங்குகள் அதிகரித்து, புத்தகம் வாசிக்கும் வழக்கம், படங்கள் பார்க்கும் மனநிலை எல்லாம் தேய்ந்துகொண்டிருந்தன.

'இவருக்கு இன்னொரு படவாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் இப்படி கம்பெனி கம்பெனியாய் ஏறி இறங்குகிறாரே?' என்று நான் ஆதங்கப்படுபவர்களில் சிலர், வரிசையாய் மனதில் வந்து போனார்கள்.

‘குமுதம்' ஆபிஸில் குந்திக்கொண்டு மீண்டும் சினிமா செய்திகள் எழுதும் கொடூரமான காட்சி ஒன்று வந்துபோனது.

அப்படியாகப்பட்ட தினங்களில் ஒன்றில் ‘கேள்விக்குறி' படத்தின் ஹீரோவும், இயக்குநருமான ஜெய்லானி என் அலுவலகத்துக்கு வந்திருந்தார்.

சுமார் ஒரு வருட கால அறிமுகம்தான் அவர். அவ்வளவாக நெருங்கிப் பழகியதில்லை என்பதால் தெரிந்தவர், நண்பர் என்கிற இரண்டுக்கும் நடுவில் வைத்திருந்தேன் அவரை.

மூவி பண்டிங் எனும் மூடுமந்திரம்!- இயக்குநர் முத்துராமலிங்கன்

பழைய்ய்ய பத்திரிகையாளன் என்கிற வகையில், பத்திரிகையாளர் காட்சிக்கு அழைப்பு வருமென்பதால், வருடத்தில் ரிலீஸாகும் அத்தனை படங்களையும் பார்க்கும் 'பாக்கியம்' பெற்றவர்களில் ஒருவனாகிய நான், எப்படியோ அவர் இயக்கி நடித்த ‘கேள்விக்குறி' படத்தைப் பார்த்திருக்கவில்லை.

அமெரிக்காவில் பெரிய சம்பளத்தில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றியவர். சினிமா தாகத்தால் அந்தப் பணியை உதறிவிட்டு வந்தவர். குற்றங்களைத் தடுக்க, குறிப்பாக லாக்-அப் மரணங்களைத் தடுக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்த வேண்டும் என்ற கருத்து கொண்ட படமாக ‘கேள்விக்குறி' இருந்ததால் சென்சார் துறையினரால் அநியாயத்துக்கு அலைக்கழிக்கப்பட்டவர் என்கிற ரீதியில் ஒரு சில தகவல்கள் மட்டுமே அவர் குறித்து தெரிந்து வைத்திருந்தேன்.

மூவி பண்டிங் எனும் மூடுமந்திரம்!- இயக்குநர் முத்துராமலிங்கன்

பொதுவான பேச்சுக்களுக்கு அப்புறமாய் ‘அடுத்து என்ன பண்றதா உத்தேசம் சார்?' ஜெய்லானிதான் ஆரம்பித்து வைத்தார்.

'தெரியல சார். கண்ணைக்கட்டி கோடம்பாக்கத்துல விட்ட மாதிரி இருக்கு. எனக்குத்தெரிஞ்ச டைரக்டர்கள் ரெண்டுபேர் ‘எவன் கழுத்தை அறுத்தாவது படம் பண்ணிக்கிட்டே இருக்கனும்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்காங்க. அப்படி சில கழுத்துகளை அறுத்து சூப் வச்சிக் குடிச்சி தொடர்ந்து படங்களும் பண்ணிக்கிட்டிருக்காங்க. எனக்கு அப்பிடி குரூரமான சினிமா ஆசையெல்லாம் இல்லை'.

‘அதுக்கு அவசியம் இல்ல சார். எனக்கு பலநாள் ஆசை ஒண்ணு. வெளிநாடுகள்ல இது ரொம்ப சகஜமான ஒண்ணுதான். நம்ம ரெண்டு பேருடைய அடுத்த படங்களை மூவிஃபண்டிங் மூலமா ட்ரை பண்ணிப்பாத்தா என்ன?'

மூவி பண்டிங் எனும் மூடுமந்திரம்!- இயக்குநர் முத்துராமலிங்கன்

ஜெய்லானி சார் சொல்லி முடித்ததும் ‘மூவி ஃபண்டிங்னா? எனது முட்டைக்கண்ணை சற்றே அகலத் திறந்து முழித்தேன்.

(நாளை மறு நாள் சொல்கிறேன்...)

குறிப்பு: கட்டுரையாளர் முத்துராமலிங்கன் பத்திரிகையாளர், எழுத்தாளர், சினிமா இயக்குநர் என பன்முகம் கொண்டவர். சமீபத்தில் வெளியான சிநேகாவின் காதலர்கள் இவர் இயக்கிய படம். அடுத்து ரூபச்சித்திர மாமரக்கிளியே என்ற படத்தை இயக்குகிறார். தொடர்புக்கு: muthuramalingam30@gmail.com.

 

Post a Comment