ஆந்திரா, தெலுங்கானா... வருகிறது ஆமீர்கானின் பிகே- தாக்கு பிடிக்குமா லிங்கா!

|

ஹைதராபாத்: எதிர்மறை விமர்சனங்களுக்கு நடுவிலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரோபோ (எந்திரன்) படத்தின் முதல் வார வசூல் சாதனையை முறியடித்தது ரஜினிகாந்தின் லிங்கா.

முதல் வாரத்தில் மொத்தம் ரூ 20.50 கோடியைக் குவித்துள்ளது லிங்கா. 2010-ல் வெளியான எந்திரன் 15 கோடியை ஈட்டியிருந்தது.

ஆந்திரா, தெலுங்கானா... வருகிறது ஆமீர்கானின் பிகே- தாக்கு பிடிக்குமா லிங்கா!

இதுவரை ஆந்திராவில் வெளியான எந்த டப்பிங் படமும் இந்த அளவு வசூலைக் குவித்ததில்லை.

டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 1000-க்கும் அதிகமான அரங்குகளில் லிங்கா தெலுங்கு பதிப்பு வெளியானது. ஒரு நேரடி தெலுங்குப் படத்துக்குரிய பிரமாண்டத்துடன் வெளியான இந்தப் படத்துக்கு முதல் மூன்று நாட்களும் ஆந்திராவில் நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தன.

இந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ 14.01 கோடியை லிங்கா வசூலித்து புதிய சாதனைப் படைத்தது.

அடுத்து வந்த வார நாட்களில் படத்துக்கு எதிராக வந்த விமர்சனங்கள் மற்றும் வாய் வழி பிரச்சாரம் காரணமாக ஓரளவு கூட்டம் குறைந்தது. ஆனாலும் சராசரியாக 50 சதவீத கூட்டத்துடன் பெருமளவு திரையரங்குகளில் இந்தப் படம் ஓடியது. வார நாட்களில் மட்டும் லிங்கா ரூ 6.50 கோடியை ஈட்டியுள்ளது.

முதல் மூன்று நாள் வசூல் மற்றும் அடுத்து வந்த நான்கு நாட்கள் வசூல் இரண்டும் சேர்த்து ரூ 20.50 கோடியை லிங்கா குவித்துள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முன்பு வெளியான ரஜினியின் எந்திரன் வசூல்தான் முதலிடத்தில் இருந்தது. இப்போது அதனை லிங்கா முறியடித்துள்ளது.

அதே நேரம், ரோபோ மொத்தம் ரூ 45 கோடியைக் குவித்தது. அந்தத் தொகையை லிங்கா எட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் இந்த வாரம் ஆமீர்கானின் பிகே அதிக அரங்குகளில் வெளியாகிறது.

 

Post a Comment