தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. நடிகர் மன்சூர் அலிகானும் போட்டி

|

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடக்கும் தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகானும் போட்டியிடுகிறார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது தலைவராக உள்ள கேயாருக்கும் அதிருப்தி கோஷ்டியினருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டன. ஏகப்பட்ட வழக்குகள், பஞ்சாயத்துகள் நடந்தன.

எனவே வரும் ஜனவரி 25-ம் தேதி சங்கத்துக்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. நடிகர் மன்சூர் அலிகானும் போட்டி

அதன்படி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியானதும், தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக கலைப்புலி தாணு, கமீலா நாசர் ஆகியோர் அறிவித்தனர். இப்போது நடிகர் மன்சூர் அலிகானும் களத்தில் குதித்துள்ளார்.

தங்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் இவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தலைவர், தவிர 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 2 செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த பதவிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கத்தில் ஓட்டு போட தகுதி உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 968 ஆகும். நாளை தொடங்கி 26-ந் தேதிவரை வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 29-ந்தேதி ஜனவரி 25-ந்தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறுகையில், "திரைக்கு வராமல் 500 சிறு பட்ஜெட் படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. என்னை தலைவராக்கினால் அந்த படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்கி ரிலீசுக்கு ஏற்பாடு செய்வேன்.

நலிந்த தயாரிப்பாளர்கள் 50 பேரை தேர்வு செய்து அவர்களைக் கூட்டாக படம் தயாரிக்க வைத்து அந்த படத்தில் விஷால் போன்ற பெரிய நடிகர்களை இலவசமாக நடிக்க வைப்பேன். அதில் வசூலாகும் பணத்தை 50 பேருக்கும் பிரித்து கொடுப்பேன். திருட்டு சி.டி.யை ஒழிக்க தெருவில் இறங்கி போராடுவேன். அதற்காக சிறைக்கு செல்லவும் தயார்," என்றார்.

 

Post a Comment